NED vs BAN Result: கட்டாய வெற்றி போட்டி! நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய வங்கதேசம்
கட்டாய வெற்றி பெற வேண்டிய போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய வங்கதேசம் சூப்பர் 8 வாய்ப்பையும் நெருங்கியிருக்கிறது. குரூப் டி பிரிவில் தென் ஆப்பரிக்காவுக்கு அடுத்த அணியாக அடுத்து சுற்றுக்கு செல்லும் அதிக வாய்ப்பு பெற்ற அணியாக வங்கதேசம் உள்ளது.

கட்டாய வெற்றி போட்டியில், நெதர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 8 வாய்ப்பை நெருங்கிய வங்கதேசம்
டி20 உலகக் கோப்பை தொடரின் 27வது போட்டி குரூப் டி பிரிவில் வங்கதேசம் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே கிங்ஸ்டவுனில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் வங்கதேசம் 2 போட்டியில் ஒரு வெற்றியும், நெதர்லாந்து அணியும் ஒரு வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருந்தன.
வங்கதேசம் ரன் குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசான் 64 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக டான்சிட் ஹசான் 35, முகமதுல்லா 25 ரன்கள் எடுத்தனர்.