HT Cricket Special: Sledging மன்னன்..! உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மெக்ராத் பிறந்தநாள்
ஹாட்ரிக் உலகக் கோப்பை கோப்பை வென்ற வீரராக இருந்து வரும் கிளென் மெக்ராத், உலகின் டாப் பேட்ஸ்மேன்களின் தூக்கத்தை கெடுத்த பவுலராக வலம் வந்துள்ளார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் உலகில் சிறந்த பவுலர் என்ற பெயரெடுத்தவர் கிளென் மெக்ராத். 1993 முதல் 2007 வரை 14 ஆண்டுகள் ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் எதிரணி பேட்ஸ்மேன்களின் தூக்கத்தை கெடுத்த பவுலராக இருந்தார்.
வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் அதிகபட்சம் 130 முதல் 135 கிமீ வேகம் மட்டுமே பந்து வீசக்கூடிய பவுலராக இருந்து வந்த மெக்ராத்தின் பலமே பந்து ஸ்விங் செய்வதும், சரியான லென்த் மற்றும் லைனில் பந்து வீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதும் தான். இதன் காரணமாகவே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பவுலராக இருந்ததோடு, சிக்கனமான பந்து வீச்சாளராகவும் இருந்துள்ளார். 6.6 அடி என்கிற இவரது உயரம் துல்லியமான பந்தை சீம் செய்வதிலும், எக்ஸ்ட்ரா பவுன்ஸ் வீசுவதற்கும் ஏதுவாக பிளஸ் பாயிண்டாக இருந்தது.
1999 உலகக் கோப்பை தொடர் வென்றபோது தொடங்கிய ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம், 2003, 2007 என தொடர்ந்து ஹாட்ரிக் உலகக் கோப்பையை கைபற்றியது. இந்த மூன்று கோப்பைகளையும் ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த பவுலராக மெக்ராத் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்திய பவுலராக இருந்து வரும் மெக்ராத், 2007 உலகக் கோப்பை தொடருடன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விடைபெற்று மொத்தமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை பெற்றார்.
100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய முதல் ஆஸ்திரேலியா பவுலர் என்ற பெருமையை பெற்ற மெக்ராத், அதிக் பேட்ஸ்மேன்களை டக் அவுட்டாக்கிய பவுலராக திகழ்கிறார். பவுலராக மட்டுமில்லாமல் அற்புதமான பீல்டராகவும் இருந்து வரும் மெக்ராத், பல சிறந்த கேட்ச்களை பிடித்த வீரர்களின் லிஸ்டில் உள்ளார்.
எந்தவொரு டாப் பேட்ஸ்மேனாக இருந்தாலும் தனது வலைக்குள் சிக்க வைக்கும் பவுலராக இருந்துள்ளார் மெக்ராத். அப்படி தப்பிக்கும் பேட்ஸ்மேன்களை ஸ்லெட்ஜ் செய்து, வெறுப்புணர்வை தூண்டிவிட்டு அவுட்டாக்குவதிலும் வல்லவராக திகழ்ந்துள்ளார். ஜெண்டில்மேன் விளையாட்டு என கூறப்படும் கிரிக்கெட்டில் இது நேர்மையற்ற விஷயமாக பார்க்கப்பட்டாலும், ஆஸ்திிரேலியா தொடர் வெற்றிகளை குவிப்பதற்கு இவர் போன்ற வீரர்களின் அணுகுமுறையே காரணமாக இருப்பதை மறுக்க முடியாது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய மெக்ராத். அதன் பின்னர் அவர் விளையாடும் வாய்ப்பை பெறவில்லை
கிரிக்கெட் தவிர தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு தொண்டு பணிகளை செய்து வரும் மெக்ராத், புற்றுநோயால் மறைந்த தனது மனைவி ஜேன் நினைவாக மார்பக புற்று ஆதரவு, கல்வி தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தனிப்பட்ட முறையில் ஆஸ்திரலேயே சக்சஸான கேப்டனாக திகழும் ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் போன்றோருக்கு பக்க பலமாக இருந்த பவுலராக மெக்ராத் இருந்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் முதல் இடத்தில் இருந்து வரும் மெக்ராத் சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை. தான் அணியில் இருந்த காலம் வரை ஆஸ்திரேலியா அணி தோல்வியை அதிகமாக எட்டிப்பார்க்க விடாமல் செய்ததில் மிக பெரிய பங்களிப்பு அளித்த மெக்ராத்துக்கு இன்று பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்