IND W vs AUS W: கட்டாய வெற்றி போட்டியில் டென்ஷன் இல்லாத ஆட்டம்! தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா மகளிர்
இந்தியாவுக்கு எதிரான வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர்களை ஆஸ்திரேலியா மகளிர் வென்று அசத்தியுள்ளது. ஒரு நாள் தொடரை முழுமையாகவும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.
இந்தியா மகளிர் - ஆஸ்திரிரேலியா மகளிர் இடையிலான மூன்றாவது டி20 போட்டி மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில், கடைசி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் பவுலிங்கை தேர்வு செய்தது.
இரு அணிகளுக்கும் கட்டாய வெற்றியை பெற்றாக வேண்டிய போட்டியாக இருந்த நிலையில், எவ்வித டென்ஷனும் இல்லாமல் ஆஸ்திரேலியா மகளிர் விளையாடியது. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.
விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்தபடியாக ஓபனர்கள் ஸ்மிரிதி மந்தனா 29, ஷெபாலி வர்மா 26 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா மகளிர் பவுலிங்கில் அற்புதமாக பந்து வீசிய ஆனபெல் சதர்லாந்து 12 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 வக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜார்ஜியா வேர்ஹம் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா மகளிர் இந்திய மகளிர் பவுலிங்கை எந்த சிரமமும் இன்றி எதிர்கொண்டு ரன்குவிப்பில் ஈடுபட்டது. 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஓபனிங் பேட்டரும், அணியிந் கேப்டனுமான அலிசா ஹீலி அரைசதமடித்து 55 ரன்கள் எடுத்தார். அவரது பார்ட்னர் பீட் மூனி 52 ரன்கள் அடித்தார்.
இந்திய மகளிர் பவுலர்களில் பூஜா வஸ்த்ராகர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.
ஆஸ்திரேலியா வீராங்கனைகள் ஆனபெல் சதர்லாந்து ஆட்ட நாயகி விருதையும், அலிசா ஹீலி தொடர் நாயகி விருதையும் வென்றனர்.
முன்னதாக, இந்தியா சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலியா மகளிர் முதலில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா மகளிர் வெற்றி பெற்றது.
இதன் பின்னர் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா மகளிர் முழுமையாக வென்றது. தற்போது டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.
இதன் மூலம் டெஸ்ட் தொடரை இந்தியா மகளிர், வெள்ளை பந்து தொடரை ஆஸ்திரேலியா மகளிர் வென்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்