Asia Cup 2023: பவுலிங்கில் மிரட்டிய குட்டி மலிங்கா! பத்திரனா வேகத்தில் வீழ்ந்த வங்கதேசம் - இலங்கைக்கு எளிய இலக்கு
SL vs Ban First Innings: மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் அணி தடுமாறி வரும் நிலையில் ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் ஆட்டம் தொடர்ந்த நிலையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் கூட எடுக்காமல் ஆல் அவுட்டானது.
ஆசிய கோப்பை 2023 தொடரின் இரண்டாவது போட்டி, குரூப் பி பிரிவை சேர்ந்த இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையே பல்லேகலேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வங்கதேசம்.
அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ், வைரஸ் காய்ச்சல் காரணமாக கடைசி நேரத்தில் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அறிமுக வீரராக தன்சித் ஹசன் தமீம் அணியில் சேர்க்கப்பட்டார். இவர் தனது முதல் போட்டியில் டக்அவுட்டாகி ஏமாற்றினார்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே வங்கதேசம் அணி முதல் விக்கெட்டை இழந்தது. இதன் பின்னர் ஓபனிங் பேட்ஸ்மேன் முகமது நயீம் மற்றும் மூன்றாவது பேட்ஸ்மேனாக வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
நயீம் 16 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அப்போது அணியின் ஸ்கோர் 25 என இருந்தது. இவரைத் தொடர்ந்து வந்த அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 5 ரன்கள் மட்டும் அடித்து வந்த வேகத்தில் நடையை கட்ட மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியது.
இதைத்தொடர்ந்து பேட் செய்ய வந்த டவ்ஹித் ஹ்ரிடோய், களத்தில் இருந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோர் விக்கெட் சரிவை தடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஆட்டத்தின் 16.1 ஓவரில் மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் பாதிப்படைந்தது. இதன் பின்னர் 20 நிமிட இடைவெளிக்கும் பிறகு போட்டி மீண்டும் தொடங்கியது.
மழைக்கு பின் ஆட்டத்தை தொடங்கிய நிலையில், டவ்ஹித் ஹ்ரிடோய் 20 ரன்னில் அவுட்டானார். இவரை தொடர்ந்து பேட் செய்த முஸ்பிகுர் ரஹீம் 13 ரன்கள் எடுக்க, மற்றவர்கள் ஒற்ற இலக்கத்தில் வெளியேறினர்.
இதற்கிடையே சிறப்பாக பேட் செய்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதத்தை பூர்த்தி செய்தார்.விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்ட அவர் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
42.4 ஓவரில் 164 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியின் குட்டி மலிங்கா என்று அழைக்கப்படும் மதிஷ பத்திரனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்பின்னரான மகேஷ் தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்