"டேய் அப்பா என்னடா இதெல்லாம்" தந்தையை மன்னியுங்கள் - சென்னை வந்த பின் அஸ்வின் பகிர்ந்த் ட்விட்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  "டேய் அப்பா என்னடா இதெல்லாம்" தந்தையை மன்னியுங்கள் - சென்னை வந்த பின் அஸ்வின் பகிர்ந்த் ட்விட்

"டேய் அப்பா என்னடா இதெல்லாம்" தந்தையை மன்னியுங்கள் - சென்னை வந்த பின் அஸ்வின் பகிர்ந்த் ட்விட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 19, 2024 08:35 PM IST

ஓய்வு குறித்து தந்தை பேசிய கருத்து வைரலாகி வரும் நிலையில் தனது தந்தையை மன்னியுங்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். வீட்டுக்கு வந்த அவருக்கு குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் வரவேற்பு அளித்தனர்.

"டேய் அப்பா என்னடா இதெல்லாம்" தந்தையை மன்னியுங்கள் - சென்னை வந்த பின் அஸ்வின் பகிர்ந்த் ட்விட்
"டேய் அப்பா என்னடா இதெல்லாம்" தந்தையை மன்னியுங்கள் - சென்னை வந்த பின் அஸ்வின் பகிர்ந்த் ட்விட்

தொடரின் பாதியில் அதுவும் தான் விளையாடாத போட்டியின் முடிவுக்கு பின் அஸ்வினின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அஸ்வினின் ஓய்வு குறித்து பல்வேறு கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வரும் நிலையில், தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் அவர் ஓய்வை அறிவித்திருக்கலாம் என அவரது தந்தை தெரிவித்துள்ளார். அஸ்வின் தந்தையின் இந்த பேச்சு பேசுபொருள் ஆன நிலையில், தந்தையின் பேச்சுக்கு அவரை மன்னிக்குமாறு கூறியுள்ளார்.

தந்தையை மன்னித்து விடுங்கள்

இதுதொடர்பாக அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், "என் அப்பா மீடியாவிடம் பேசுவதற்கு பயிற்சி பெற்றவர் அல்ல, டேய் அப்பா என்னடா இதெல்லாம். "அப்பாவின் அறிக்கைகள்" என்ற இந்த செழுமையான பாரம்பரியத்தை பின்பற்றுவீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை. அவரை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அஸ்வின் ஓய்வு குறித்து அவரது தந்தை பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "அஸ்வின் ஓய்வு அறிவிப்பு மற்றவர்களை போல் ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

அவமானத்தால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்

அஸ்வின் முடிவில் நான் தலையிட முடியாது. ஆனால் அவர் ஓய்வை அறிவித்ததற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னவென்று அஸ்வினுக்கு மட்டும்தான் தெரியும்.

அவரை அவமானம் செய்யும் செயல் நடந்து கொண்டிருந்தது. அவர் எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியும்? இதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்" என்று பேசியிருந்தார்.

அஸ்வின் தந்தை பேட்டி அளித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், ரசிகர்கள் பலரும் பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அஸ்வினை நடத்திய விதம் குறித்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. இதையடுத்து இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்த் பாடலுடன் அஸ்வினுக்கு வரவேற்பு

ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று காலை சென்னை திரும்பிய அஸ்வின், தனது வீட்டுக்கு வந்த சேர்ந்தபோது, விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பாடலான "நீ பொட்டு வச்ச தங்கக்குடம்" என்ற பாடலுடன் ட்ரம்ஸ் வாசிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அஸ்வினின் மனைவி ப்ரீத்தி நாராயணன், அவரது இரு மகள்கள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். குடும்பத்தினர் அனைவரும் அஸ்வினை கட்டியணைத்து ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்தினர்.

கிரிக்கெட்டராக பயணம் முடியவில்லை.

இதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில், "2011 உலகக் கோப்பைக்கு பின் மீண்டும் இப்படியொரு வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ளேன். சென்னை அணிக்காக நீண்ட காலம் ஆடினாலும் யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

அஸ்வின் என்ற கிரிக்கெட்டரின் பயணம் முடியவில்லை. அஸ்வின் என்ற இந்திய கிரிக்கெட்டரின் பயணமே முடிவுக்கு வந்துள்ளது. ஓய்வை அறிவித்தது எனக்கு பெரிதாக எமோஷனலாக இருக்கவில்லை. ஆனால் என்னை சுற்றியுள்ளவர்களுக்கு எமோஷனலாக இருந்திருக்கும். சில நாள்களில் அது சரியாகிவிடும்.

கிரிக்கெட் பற்றிய சிந்தனையே இல்லை

என்னை பொறுத்தவரை இந்த அறிவிப்பு எனக்கு நிம்மதியாக இருக்கிறது. ஓய்வு குறித்த முடிவு கடந்த சில மாதங்களாகவே மனதில் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளாகவே இரவில் கிரிக்கெட் பற்றிய சிந்தனைகள் வரவில்லை. அதுவே எனக்கு அடுத்த பயணத்தை தொடங்குவதற்கான அறிகுறியாக இருந்தது. அடுத்த சில நாட்கள் கொஞ்சம் பயிற்சி இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்." என்று கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.