Team India: கம்பீருக்கு துணையாக இணையும் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர்..பவுலிங் பயிற்சியாளர் குறித்து இறுதி முடிவு
இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக, தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீருக்கு துணையாக முன்னாள் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் இணையவுள்ளனர்.
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கெளதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் தனது முதல் பயணத்தை தொடங்குகிறார். இந்த தொடரில் டி20, ஒரு நாள் தலா 3 போட்டிகளில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த தொடருக்கான இந்திய அணி கடந்து இரு நாள்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு நாள் அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாகவும், டி20 அணிக்கு சூர்ய குமார் யாதவ் கேப்டனாகவும் செயல்படவுள்ளனர்.
இரண்டு இணை பயிற்சியாளர்கள்
இதையடுத்து இலங்கை சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் கம்பீருடன் இணை பயிற்சியாளர்களாக முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் அபிஷேக் நாயர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி நெதர்லாந்து வீரர் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் இணையவுள்ளனராம்.
இவர்கள் இருவரும் தங்களது அனுபவத்தை அணிக்காக வெளிப்படுத்துவார்கள் எனவும், கம்பீரின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நாயர் மற்றும் டென் டோஸ்கேட் பணிபுரிந்து இருப்பதால் அந்த அனுபவமும் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது
தற்போது பீல்டிங் பயிற்சியாளராக இருந்து வரும் திலீப், தனது பணியை தொடர்வார் என பிசிசிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. திலீப் தனது திறமையான பீல்டிங் பயிற்சிகள் மற்றும் பிணைப்பு பயிற்சிகளுக்கு பெயர் பெற்றவராக இருப்பதாகவும், இதை மிகவும் முக்கியமான அம்சமாக கருதி அவரை பிசிசிஐ தக்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
திலீப் உடனடியாக இந்திய அணியுடன் இணைவார் எனவும், தற்போது அமெரிக்காவில் இருந்து வரும் டென் டோஸ்கேட் அணியில் இணைவது குறித்து உறுதியான தகவல்கள் தெரிவில்லை.
பவுலிங் பயிற்சியாளர்
இதேபோல் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளருக்கான போட்டியில் தென் ஆப்பரிக்கா முன்னாள் வீரர் மோர்னே மார்கல் முன்னிலையில் இருக்கிறார். இவரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக கெளதம் கம்பீர் பணியாற்றியபோது, அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்துள்ளார். எனவே இருவருக்கும் நல்ல புரிதல் இருப்பதால் மோர்கல் தான் இந்தியாவின் பவுலிங் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது தனது குடும்பத்தினருடன் தென் ஆப்பரிக்காவில் இருந்து வரும் மோர்னே மார்கல், பிசிசிஐயுடன் இணைந்து இந்திய பவுலிங் பயிற்சியாளராக செயல்படுவதில் ஆர்வமாக உள்ளாராம். எனவே அவரை பயிற்சியாளராக நியமிப்பது குறித்து பிசிசிஐ விரைவில் இறுதி முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான தொடர்
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க இந்திய அணியினர் மும்பையிலிருந்து கொழும்புவுக்கு வரும் திங்கிழமை புறப்படுகின்றனர். அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கெளதம் கம்பீர் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளில் பல்லேகேலேவிலும், அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகஸ்ட் 2,4, 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் நடைபெறுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்