HT Cricket Special: கபில் தேவ் சிரிப்பு, ரிவர்ஸ் கேட்ச்! முதல் உலகக் கோப்பை - இந்திய ரசிகர்கள் மறக்க முடியாத நாள் இன்று
முதல் உலகக் கோப்பையை இந்த நாளில் தான் இந்தியா வென்றது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விவன் ரிச்சர்ட்ஸ் விக்கெட்டை ரிவர்ஸ் கேட்ச் மூலம் கபில் தேவ் பிடித்தது, கோப்பையை கையில் ஏந்திய பிறகு கபில் தேவ் வெளிப்படுத்திய சிரிப்பு என இந்திய ரசிகர்கள் மறக்க முடியாத நாளாக ஜூன் 25 உள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் என்றைக்கும் மறக்க முடியாத நாள் ஜூன் 25ஆம் தேதி. இந்த நாளில் தான் சரியாக இன்றிலிருந்து 41 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பைக்கு முத்தமிட்டது. இதற்கு செய்து காட்டியது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி.
தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பை வென்ற ஜாம்பவான் வீரர்கள் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை ஹாட்ரிக் முறை சாம்பியன் ஆக விடாமல் தடுத்ததோடு, அவர்களின் ஆதிக்கத்தையும் உடைத்தெறிந்தது.
முதல் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்காக கடந்து வந்த பாதையில் பல்வேறு தனித்துவ சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் 1983 உலகக் கோப்பை தொடரில் இந்தியா நிகழ்த்தியிருக்கும் முக்கிய சாதனைகளும், அறிந்திராத சில விஷயங்களையும் பார்க்கலாம்
குறைவான ஸ்கோரில் வெற்றி
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா 183 ரன்களில் ஆல்அவுட்டானது. மிகவும் குறைவான ஸ்காராக இது அமைந்திருந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸை 140 ரன்களில் ஆல்அவுட்டாக்கி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் உலகக் கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் குறைவான ஸ்கோர் அடித்து, அதை டிபெண்ட் செய்த அணியாக இந்தியா உள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்
அந்த காலகட்டத்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 1972 முதல் 1975 காலகட்டம் வரை நான்கு முறை முறியடிக்கப்பட்டது.
இதன் பின்னர் நியூசிலாந்து பேட்ஸ்மேன் அடித்த கிளென் டர்னர் 171 ரன்கள் சாதனை 9 ஆண்டுகள் வரை வீழ்த்தப்படவில்லை. இதை 1983 உலகக் கோப்பை தொடரின்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 175 ரன்கள் அடித்த இந்திய கேப்டன் கபில்தேவ் முறியடித்தார்.
இவரது இந்த இன்னிங்ஸ் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற முக்கிய காரணமாக அமைந்தது. 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைமையில் இருந்தபோது களமிறங்கிய கபில்தேவ் தனது அற்புத இன்னிங்ஸால் இந்தியா தொடரை விட்டு வெளியேறுவதை தடுத்தார். ஒரு நாள் கிரிக்கெட்டிலும், உலகக் கோப்பை போட்டிகளிலும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னிங்ஸாக இது அமைந்துள்ளது.
1999 உலகக் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் செளரவ் கங்குலி 183 ரன்கள் அடிக்கும் வரை,
கபில்தேவ் 175 ரன்கள் இந்திய பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோராக 16 ஆண்டுகள் வரை நீடித்தது.
அரையிறுதி, இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருது
தனது அற்புத பவுலிங்கால் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட மோஹிந்தர் அமர்நாத் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றார். உலகக் கோப்பை தொடரில் இந்த இரு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனை புரிந்தார்.
இவருக்கு அடுத்தபடியாக 1996 உலகக் கோப்பை தொடரில் இலங்கை வீரர் அரவிந்த் டி சில்வா, 1999 உலகக் கோப்பை தொடரில் ஷேன் வார்னே ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தினர்.
அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 175 ரன்கள் அடித்த கபில் தேவ், சையத் கிர்மானியுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்ததில் மற்றொரு சாதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தனர்.
இதுவரை ஒரு நாள் போட்டிகளில் 9வது விக்கெட்டுக்கு இரண்டாவது பெரிய பார்ட்னர்ஷிப்பாக உள்ளது. அத்துடன் இதுவே 1983 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.
கபில்தேவ் ஆல்ரவுண்ட் சாதனை
இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த கபில் தேவ், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இது சிறந்த ஆல்ரவுண்ட் சாதனையாக அமைந்தது. இப்படியொரு சாதனை இதன் பிறகு இந்தியாவுக்காக 2011 உலகக் கோப்பை தொடரின்போது யுவராஜ் சிங் நிகழ்த்தினார்.
35 விக்கெட்டுகள்
இந்திய பவுலர்களான ரோஜர் பின்னி, மதன் லால் ஆகியோர் இணைந்து 1983 உலகக் கோப்பை தொடரில், 35 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இது சிறந்த பவுலிங் பார்ட்னர்ஷிப்பாக அந்த காலகட்டத்தில் அமைந்திருந்தது.
கபில் தேவ் ரிவர்ஸ் கேட்ச்
ஒரு கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தியது மட்டுமல்லாமல், வீரராகவும் பேட்டிங் பவுலிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்தார் கபில் தேவ்.
அந்த வகையில் இறுதிப்போட்டியில் அதிரடியாக பேட் செய்து வந்த விவன் ரிச்சர்ட்ஸை அற்புதமான ரிவர்ஸ் கேட்ச் மூலம் வெளியேற்றினார் கபில் தேவ். ஷார்ட் ஸ்கொயர் லெக்கின் இருந்து பவுண்டரி அருகே விறுவிறுவென ஓடிச்சென்று கடினமாக கேட்ச் பிடித்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
கண்களில் நிற்கும் கபில் தேவ் சிரிப்பு
2011 உலகக் கோப்பை தொடரில் சிக்ஸருடன் பினிஷ் செய்தார் தோனி. அவரது அந்த சிக்ஸரை யாராலும் மறக்க முடியாது. அதைப் போல் இந்தியா முதல் முறையாக உலக சாம்பியன் ஆன தருணத்தின்போது கோப்பையை கையில் ஏந்தியவுடன் கபில்தேவ் வெளிப்படுத்திய சிரிப்பை அவ்வளவு எளிதாக இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்