தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ravichandran Ashwin: 13 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வினுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு! இரட்டை மாயாஜாலம் செய்ய வாய்ப்பு

Ravichandran Ashwin: 13 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வினுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு! இரட்டை மாயாஜாலம் செய்ய வாய்ப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 24, 2024 04:48 PM IST

Ravichandran Ashwin: ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசியாக சிஎஸ்கே அணியில் விளையாடியபோது 2011இல் ஐபிஎல் கோப்பை வென்றார். இது சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. அதன் பிறகு மீண்டும் இதே இடத்தில் கோப்பை வெல்ல 13 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வினுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாக இன்றைய போட்டி அமைந்துள்ளது.

 13 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வினுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு
13 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வினுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு (IPL)

ட்ரெண்டிங் செய்திகள்

இதுவரை சன்ரைசர்ஸ் இங்கு விளையாடிய 10 போட்டிகளில் 1 வெற்றி, 8 தோல்வி, 1 சமன் (சூப்பர் ஓவரில் தோல்வி) செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை இங்கு விளையாடியிருக்கும் 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்வியை பெற்றுள்ளது. எனவே இந்த இரு அணிகளுக்கும் சவால் மிக்க மைதானமாகவே சேப்பாக்கம் இருந்து வந்துள்ளது.

13 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வினுக்கு வாய்ப்பு

சிஎஸ்கே அணியில் தனது ஐபிஎல் கேரியரை தொடங்கிய அஸ்வின், அதன் பிறகு ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு விளையாடியுள்ளார்.

இதில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியபோது 2011 சீசனில் ஐபிஎல் கோப்பை வென்றார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு எதிராக வெற்றி பெற்ற அந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதன் மூலம் உள்ளூர் மைதானத்தில் கோப்பை வென்ற முதல் அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றது. அப்போது அஸ்வினுக்கு வயது 24 தான்.

13 ஆண்டுகள் கழித்து தற்போது ப்ளேஆஃப் சுற்றில் இரண்டாவது குவாலிபயர் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் நிலையில், அதில் விளையாட இருக்கிறார் அஸ்வின். இந்த முறை அவர் சிஎஸ்கேவுக்காக இல்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக, சன் ரைசர்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகிறார். எனவே பழைய மேஜிக்கை உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில், தனக்கு நன்கு பரிட்சயமான மைதானத்தில் அஸ்வின் நிகழ்த்துவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சேப்பாக்கத்தில் எப்போதும் சிறப்பாக செயல்படும் பவுலராக அஸ்வின் இருந்து வந்துள்ளார். இந்த சீசனில் கூட அவரது சிறந்த பவுலிங்கான 3/24, சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் தான் நடந்தது. எனவே எல்லாம் அவர் கையில் தான் என்பது போல் இன்றைய போட்டி அமைந்துள்ளது.

நல்ல பார்மில் அஸ்வின்

இந்த சீசனில் முதல் 8 போட்டிகளில் ஒரேயொரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார் அஸ்வின். இதைதத்தொடர்ந்து கடைசி 5 போட்டிகளில் மட்டும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 6.81 என்ற குறைவான எகானமியில் பந்து வீசியுள்ளார். எனவே அவரது பவுலிங் பார்ம் ஸ்பின்னர்களின் சொர்க்கபுரியாக இருக்கும் சேப்பாக்கம் தொடருவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் காரம் பவுலிங், ரிவர்ஸ் காரம் பவுலிங் பந்து வீச்சு மூலம் முக்கிய விக்கெட்டுகளான கேமரூன் க்ரீன், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரை தூக்கினார். எனவே அதுபோல் மாயஜாலம் செய்து சன் ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி தரலாம்

பைனலும் சேப்பாக்கம்

இன்றைய போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடும். இந்த போட்டியும் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

அந்த வகையில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டியில் கொல்கத்தாவையும் வென்றால் 13 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் இரண்டாவது ஐபிஎல் கோப்பையை அஸ்வின் வெல்வார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024