HT Yatra: போருக்காக அமர்ந்த இடம்.. சிவனை பூசித்த முருக பெருமான்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஆறுபடை வீடு கொண்டு பக்தர்களை காத்து வரும் முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் விளங்கி வருகின்றது. அறுபடை வீடுகளில் மலையில் இல்லாமல் கடல் பகுதியில் இருக்கக்கூடிய ஒரே கோயில் இதுதான். சுமார் 2000 ஆண்டுகள் பழமை கொண்ட கோயிலாக இது கூறப்படுகிறது. இது குறித்து சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் என தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் முன்னர் திருச்சீரலைவாய் என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தல வரலாறு
சூரபத்மன் என்ற அசுரன் தேவர்களை அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இது குறித்து தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டுள்ளனர். உடனே சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்கி முருகப்பெருமானை தோற்றுவித்தார்.
அதன் பின்னர் சூரபத்மனை அளிக்குமாறு முருகப்பெருமானிடம் சிவபெருமான் கட்டளையிட்டார். அதே சமயத்தில் தேவர்களின் ராஜகுருவாக விளங்கக்கூடிய குரு பகவான் இந்த தளத்தில் அமர்ந்து முருக பெருமானை தரிசனம் செய்வதற்காக தவம் செய்து கொண்டிருந்தார்.
அதன் பின்னர் குருபகவானுக்கு முருக பெருமான் காட்சி கொடுத்து அந்த இடத்தில் தங்கி அசுரர்களின் வரலாறு குறித்து குருபகவானிடம் கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் தனது படைத் தளபதியாக விளங்கி வந்த வீரபாகுவை சூரபத்மனிடம் அனுப்பி சமாதானம் பேசினார்.
சமாதானத்திற்கு மறுத்த சூரபத்மன் எதையும் கேட்கவில்லை. அதன் பின்னர் தனது படைகளோடு சென்று முருக பெருமான் சூரபத்மனை வதம் செய்தார். எனக்கு காட்சி கொடுத்த இந்த இடத்தில் நீங்கள் எழுந்தருள வேண்டும் என குருபகவான் கேட்டுக் கொண்டதால் முருகப்பெருமான் அதே இடத்தில் தங்கினார்.
அதன் பின்னர் விஸ்வகர்மாவை அழைத்து குரு பகவான் அந்த இடத்தில் கோயில் எழுப்பினார். சூரனை அழித்து முருகப்பெருமான் வெற்றி பெற்றதால் அவர் ஜெயந்திநாதர் என அழைக்கப்பட்டார். காலப்போக்கில் அந்த பெயர் மறுவி செந்தில்நாதர் என மாறியது. திருஜெயந்திபுரம் என அழைக்கப்பட்ட அந்த ஊர் காலப்போக்கில் திருச்செந்தூர் என அழைக்கப்பட்டது.
தலத்தின் சிறப்பு
சூரனை வதம் செய்த முருக பெருமான் சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இங்கு சிவ பூஜை நடத்தியுள்ளார். வலது கையில் தாமரை மலர் ஏந்தியபடி முருக பெருமான் அதே கோளத்தில் இங்கு காட்சி அளிக்கின்றார். இந்த கோலத்தில் முருகப்பெருமான் சிவயோகி போல ஜடா முடி கொண்டு காட்சியளிக்கின்றார். இவருக்கு இடதுபுறம் சுவரில் லிங்கம் இருக்கும்.
சிவபெருமானுக்கு தீபாராதனை செய்த பிறகு முருக பெருமானுக்கு பூஜைகள் நடத்தப்படும். இந்த திருச்செந்தூர் கோயிலில் வீற்றிருக்கக்கூடிய முருக பெருமான் கடலை நோக்கி பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சி அளிக்கின்றார்.
இந்த திருச்செந்தூர் கோயிலோடு சேர்த்து மற்ற ஐந்து தளங்களும் ஆறுபடைவீடாக போற்றப்பட்டிருக்கிறது. தனது பக்தர்களின் குறைகளை நீக்கி அருள் பாலிக்கும் முருகப்பெருமான் இந்த ஆறு இடங்களில் உறைந்திருக்கிறார். அவரை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என நக்கீரர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
திருமணமாகாதவர்கள் திருமணத்தில் தடை இருக்கக் கூடியவர்கள் இந்த தளத்தில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமியை வணங்கினால் நன்மை நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய சரவணபொய்கையில் ஆறு தாமரை மலர்கள் மீது ஆறு குழந்தைகளாக முருக பெருமான் வீற்று இருப்பது போல், அதனை கார்த்திகை பெண்கள் எடுப்பது போல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
வழித்தடம்
மதுரை சென்னை திருநெல்வேலி உள்பட அனைத்து பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூர் கோயிலுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. இந்த திருக்கோயில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளதால் விமான நிலைய வசதிகளும் உள்ளன. அங்கிருந்து பேருந்து அல்லது ரயில் மூலம் திருச்செந்தூர் கோயிலுக்கு செல்ல முடியும். தங்கமிடம் உணவு விடுதி என அனைத்து வசதிகளும் அங்கு உள்ளன. திருச்செந்தூரில் ரயில் நிலையமும் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9