கைலாயத்தை கண்ணில் காட்டிய சிவபெருமான்.. பாக்கியம் பெற்ற மன்னன்.. தமிழ் புலவர்கள் உருவான இடம்
சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் எனவும் தாயார் ஆவுடை நாயகி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Kailasanathar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான் மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்த பாடு கிடையாது.
உலகம் முழுவதும் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே பக்தர்கள் கூட்டம் சுற்றி வாழ்ந்து வருகின்றனர். சிவபெருமானின் சாம்ராஜ்யம் மிகப்பெரிய சாம்ராஜ்யமாகும். மனித உயிர் இந்த உலகத்தில் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
சாமானிய மனிதர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு சிவபெருமானை வணங்கி வந்தனர். அதற்குப் பிறகு மன்னர்கள் காலம் தொடங்கியது. மண்ணுக்காக பல இடங்களைச் சார்ந்த மன்னர்கள் போரிட்டு வந்தனர். இருப்பினும் அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.
இன்று இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் வானுயர்ந்து காணப்படும் கோபுரங்கள் அனைத்தும் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களாகும். சோழ சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்றுவரை அறிவியல் வல்லுனர்களுக்கு ஒரு ஆச்சரிய குறியீடாக இருந்து வருகிறது.
தங்களது கட்டிடக்கலைகள் அனைத்தையும் சிவபெருமானுக்கு அர்ப்பணித்து இந்த பிரபஞ்சமே இவன் ஒருவனுக்குள் அடங்கும் என சிவபெருமானை போற்றி புகழ்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஒருபுறம் பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் என அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.
அந்த வகையில் செல்லும் இடமெல்லாம் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காக மன்னர்கள் பல கோயில்களை சீரமைத்து மற்றும் புதிய கோயில்களை கட்டி வழிபாடுகள் மேற்கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட கோயில்கள் இன்று வரை காலத்தால் அளிக்க முடியாத வரலாற்றுச் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது.
அந்த வரிசையில் இருக்கும் கோயில்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் எனவும் தாயார் ஆவுடை நாயகி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வீற்றிருக்கக் கூடிய சுவாமி மற்றும் அம்பாளையும் வழிபட்டால் விரைவில் அவர்களுக்கு புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தமிழ் அறிஞர்களின் அடித்தள நிலமாக இந்த கோயில் இருக்கும் இடம் விளங்கி வருகிறது. பல இலக்கியச் சுவடிகளை தேடுவதற்காகவே தமிழ் தாத்தா உ.வே.சா இங்கு வந்ததாக கூறப்படுகிறது. பல தமிழ் புலவர்கள் வாழ்ந்த மண்ணாக இந்த இடம் இன்றும் அவர்களுடைய பெயர் பல கிராமங்களுக்கு வைக்கப்பட்டுள்ளன.
தல வரலாறு
மலையத்துவஜ பாண்டியன் என்ற மன்னன் மதுரையை ஆண்டு வந்தார். அவருக்கு பல நாட்கள் ஆக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் மன்னன் மிகப்பெரிய வருத்தத்தில் ஆழ்ந்து வந்துள்ளார். உடனே தனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக புத்திரகாமேஷ்டி யாகம் நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
இந்த யாகத்தை தொடங்குவதற்கு முன்பாக வடநாட்டில் இருக்கக்கூடிய கைலாயத்திற்கு யாத்திரை சென்று தரிசனம் செய்து வரும்படி அங்கு இருந்து அந்தணர்கள் மன்னனுக்கு ஆலோசனை கூறியுள்ளனர். அதன் காரணமாக பாண்டிய மன்னன் தனது மனைவி கஞ்சன மாலையோடு யாத்திரை செல்வதற்காக கிளம்பியுள்ளார்.
செல்கின்ற வழியில் உனது மனமே கைலாயம் என அவருக்கு அசரீரி ஒன்று கேட்டுள்ளது. இதனைக் கேட்ட பாண்டிய மன்னன் சிவ சிந்தனையில் மூழ்கினார். அந்த இடத்திலேயே சிவபெருமானை வழிபட்டு கைலாயத்தை மனதிலேயே தரிசனம் செய்தார். சிவபெருமான் முழு பலன்களையும் அப்படியே கொடுத்தார். அந்த இடத்தில் கட்டப்பட்ட திருக்கோயில் தான் இந்த கைலாசநாதர் திருக்கோயில். அதன் காரணமாகவே அங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானுக்கு கைலாசநாதர் என பெயர் வைக்கப்பட்டது.