HT Temple Spl: 108 திவ்ய தேசங்களைத் தரிசித்த புண்ணிய பலனைத் தரும் ஒரே ஆலயம் இது!-this is the only temple that gives the holy fruit of visiting 108 divine lands - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Temple Spl: 108 திவ்ய தேசங்களைத் தரிசித்த புண்ணிய பலனைத் தரும் ஒரே ஆலயம் இது!

HT Temple Spl: 108 திவ்ய தேசங்களைத் தரிசித்த புண்ணிய பலனைத் தரும் ஒரே ஆலயம் இது!

Manigandan K T HT Tamil
Oct 11, 2023 05:50 AM IST

கூரத்தாழ்வார், இக்கோவில் எத்துணை சிறப்பாகக் கட்டப்பட்டு இருக்கிறது என்பதை தமது பாயிரங்களில் மிக புகழ்ந்து கூறுவார்.

ஸ்ரீ வீர நாராயண பெருமாள் கோயில்
ஸ்ரீ வீர நாராயண பெருமாள் கோயில் (Tamilnadu Tourism:)

108 திவ்ய தேசங்களைத் தரிசித்த புண்ணிய பலனைத் தரும் ஒரே ஆலயம் இது என்று கல்வெட்டு உள்ளதாக கூறுவர். இது திவ்ய தேசமல்ல ஆனால் அதனினும் பெருமை வாய்ந்தது. சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது. கல் வெட்டுகளில் இவ்வூர் "வீர நாராயண புரம்"என குறிப்பிடப் பட்டுள்ளது.

வைஷ்ணவ சம்பிரதாய படியான சேவை சாதிக்கும் பாங்கில், சந்நதிகள் அமையப் பெற்ற ஒரு அற்புதமான ஆலயம் இது. கண்டராதித்த சோழன் காலக் கல்வெட்டில், இதை வீர நாராயண விண்ணகர் எனவும், ஜட வர்ம சுந்தர பாண்டியன் காலத்திய கல் வெட்டில், பெருமாளை "மன்னார்" எனவும், கிருஷ்ண தேவராயர் காலத்து கல்வெட்டில் பெருமாளை "அழகிய மன்னார்" எனவும் காணப்படுகின்றது.

"பாஞ்சராத்ர ஆகம" தென்கலை சம்பிரதாய திருக்கோவில் இது. இதை "துவாரபதி மன்னன்" திருக்கோவில் என்றும் கூறுவார்கள். 10 ம் நூற்றாண்டின் ஆலயமிது. 13 ம் நூற்றாண்டில், சத்ய வர்மன் சுந்திர பாண்டியன் பதுப்பித்தார் என்பர். நான்கு வேதங்களில் சிறந்து விளங்கிய அறிஞர்களுக்கு, இந்தக் கிராமம், உருவாக்கப்பட்டு, பரிசளிக்கப் பட்டதாலிது "வீர நாராயண சதுர்வேதி மங்கலம்" என அழைக்கப்பட்டது.

கூரத்தாழ்வார், இக்கோவில் எத்துணை சிறப்பாகக் கட்டப்பட்டு இருக்கிறது என்பதை தமது பாயிரங்களில் மிக புகழ்ந்து கூறுவார். இதன் தல விருட்சம் நந்தியா வட்டை, தேவ அல்லது வேத புஷ்கரணி தீர்த்தம் உண்டு. முதலாம் பராந்தகனால் இந்நகர் உருவாக்கப்பட்டது சிதம்பரம் 26 கிமீ தூரத்தில் உள்ளது.சைவத் திருமுறை 12ல் 10வதாக வருகின்ற, திருமந்திரம் அருளிய திரு மூலர் அவதாரம் இங்குதான் நிகழ்ந்தது.

ஊரின் நடுநாயகமாக, கிழக்கு திசை நோக்கி, அமைந்துள்ளது இவ் வாலயம். பெருமாள் இங்கு நின்ற திருக் கோலத்தில், சங்கு சக்கரம் ஏந்தி, ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராக, காட்சி தந்தருளுகிறார். யோக நரசிம்மர் மற்றும் ஸ்ரீ வராகரும் உண்டு. தாயார் மரகதவல்லி, மூலஸ்தானம் வீர நாராயண பெருமாள்‌ பலிபீடம், கொடிமரம் தாண்டிய பின் கருடாழ்வார் அதன்பின் இக்கோவில் உருவாகக் காரணமாக இருந்த மதங்க முனிவர், இது தவிர நம்மாழ்வாரை வணங்கிய நிலையிலுள்ள மதுர கவி ஆழ்வார், நாத முனிகள் சன்னதி, ஸ்ரீ ராமர் பின்,ஆண்டாள் நாச்சியார், பின்பு ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகள் உண்டு‌.

ஜிரும்பன ராஜா மகரிஷி வேண்டிக் கொண்டபடி, ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவி, இங்கு பிறந்து, திருமண வயதில் , சுயம்வரம் நடக்க, அதில், கருட வாகனத்தில் வந்து கலந்துகொண்ட பெருமாள் எதிர்த்தவர்களை சின்னா பின்னமாக்கி, வெற்றி கண்டு, ஜெயித்து, "வீரம்" காட்டியதாலேயே வீர நாராயண பெருமாள் என அழைக்கப்பட்டார்.

ஆழ்வார்கள் மனம் உருகி ஸ்ரீ மஹாவிஷ்ணுவைப் பற்றிப் புகழ்ந்து பாடிய, பாடல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்கள் கண்டெடுக்கப்பட்ட சிறப்பான தலமிது. குப்பங்குழியில் அவதரித்த நாதமுனிகள், இப் பிரபந்தப் பாடல்களை, நம்மாழ்வார் திருவருளால் மீட்டு நமக்கு வழங்கினார். இவரை முதல்வராகக் கொண்டே, வைணவ ஆச்சார்யார்கள் எனும் பரம்பரை தொடங்குவதாக கூறுவர்‌.

வைணவத்திற்கு, மிகப் பெரிய அளவிலான, தொண்டுகளை ஆற்றிய, ஸ்ரீ மத் நாதமுனிகள், அவர் பேரன் ஸ்ரீ ஆளவந்தார் இருவரும் அவதரித்த புண்ணிய தலமிது. நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு, நன்கு பண் அமைத்து, அது பரவக்காரணமாயிருந்தவர் ஸ்ரீ நாதமுனிகள்தான்.

மதங்க முனிவரின், தவம், பகவானை ஏற்றுக் கொள்ளச் செய்து, இங்கு வீர நாராயணர் எனும் திருநாமத்துடன், அருள் புரிகிறார். ஆகவே இத்தலம் "மதங்காஸ்ரமம்"எனவும் பெயர் பெற்ற ஒரு தலம்.‌ ஸ்ரீ நாதமுனிகள் யோக ரா ஹஸ்ய மற்றும் நியாய தத்வத்தின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலப் போக்கில் மறைந்து போன, பல ஆழ்வார்களின் பிரபந்தங்களைத் தேடித் தொகுத்தெடுக்க, ஸ்ரீ நாத முனிகள், திருவாய்மொழி ஆயிரத்தையும் பெற வேண்டும் என்கிற தீராத தாகம் குடி கொண்டு, அதில் வெற்றி பெற்றவர். நீண்ட நெடு தல யாத்திரைகள் சென்றவர். குருபரம்பரை இணையக் காரணமானவர்‌.

வைணவ ஆச்சார்யாரான ஸ்ரீ மத் ஆளவந்தான், நாத முனிகளின் பேரன் ஆவார். தந்தை ஈஸ்வர மூர்த்தி. காட்டுமன்னார்குடியில் பிறந்த இவரை "யமுனைத் துறைவன்" என போற்றுவர் மணக்கால் நம்பிகள். ஸ்ரீ ராமானுஜரின் முதன்மைக் குரு ஸ்ரீ ஆளவந்தான். திருப்பதி, திருமலையில், பெருமாளுக்குரிய மாலை, பூக்கள் வைக்கும் இடம், இன்றும் இவர் பெயரைத் தாங்கி நிற்கிறது. பெரும் பண்டிதரான, ஆக்கியாழ்வானை, தம் புலமையால், சிறு வயதிலேயேவென்ற, இவரைப் பார்த்து எமை ஆள வந்தீரோ? என அரசிகேட்டு ஆனந்தக் கண்ணீர் வடிக்க, அரசர் இவருக்கு பாதி நாட்டைக் கொடுத்து, அதை இவர் அரசாட்சி செய்தார் என்பது வரலாறு.

ஸ்ரீ ஆளவந்தார் தலைமை வகித்த காலத்தில், அவர் மெத்தப் படித்தவர், சிஷ்ய கோடிகளிடத்து பரிவும், மிக கருணையும் கொண்டவர், நன்றி உணர்வு மிக்கவர் என அறியப்பட்டவர்‌. இவர் திருமேனி, பொன்னுலகம் புகுந்த போது, இவரது கை விரல்கள் மூன்று மடங்கி இருந்தன‌‌ ஸ்ரீ ராமானுஜர் முன்வந்து, அவரின் மூன்று எண்ணங்களை நிறைவு செய்வோம் என்றதும், விரல்கள் விரிந்தன‌‌. அதன் காரணமாக ,கடினமான, வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு ", வசிஷ்டாத்வைத" முறையில் நன்கு, பாஷ்யம் எழுதி, குருவின் ஆசையை பூர்த்திசெய்தார் ஸ்ரீ ராமானுஜர்‌. மேலும், ஆழ்வார்கள் சென்ற பல தலங்களுக்கும் சென்று தரிசித்தார்‌‌. வியாச பராசரர் என தீவிர சிஷ்யர் ஒருவர்க்கு பெயர் வைத்து, மூன்று கடமைகளை சரிவர முடித்தார்‌

சென்னைக்குத் தண்ணீர் தந்த வீராணம் ஏரி, இங்கு தான் உள்ளது‌. பேரரசர், ராஜா தித்தன் என்பவர், தனது லட்சக்கணக்கான வீரர்களை வைத்து, வட காவேரி, கொள்ளிடம் என அழைக்கப்பெறும் பெரிய நதியின் நீர், வீணே கடலில் கலப்பது கண்டு, கடல் போன்றே விசாலமாக, 1445 மில்லியன் கன அடி கொள்ளளவு உள்ள, 14 கிமீ நீளமுள்ள, உலகிலேயே, மனிதனால், சாதாரணத் கருவிகளைக் கொண்டே, உருவாக்கப்பட்ட மிகப் பெரிய ஏரி இது‌‌. 64 பீடங்கள் எனும் கருத்தியலில், ஸ்ரீ ராமானுஜர், 64 சிம்ஹா சாந்திபதிகள் அடிப்படை கொண்டு, 64 திறப்புகளை இதில் வைத்துள்ளார்‌.

எழுத்தாளர் கல்கியின் பெரும் படைப்பான , "பொன்னியின் செல்வன்", சமீபத்தில் திரைப்படமாக வந்த இதில், இந்த ஏரிக் கரையிலிருந்துதான் கதை தொடங்குகிறது. புதினம் இதை, "வீர நாராயண ஏரி" என்றே குறிப்பிடும்‌. மேலும் ஆலயம் "விண்ணகரக் கோவில்" என வரும்‌. ஏரிகளைக்காக்க,பெருமாள் கோவில் உருவானது பற்றி நாவலில் குறிப்பு உண்டு‌.

இவ்வாலய தேரோட்டம் பிரசித்தமானது‌. ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக நடக்கும்‌‌. இரவு சுவாமி புஷ்ப பல்லக்கில் வீதியுலா உண்டு. திருக் கல்யாண உற்சவம் போன்ற பல விழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகின்றது.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை.

Whats_app_banner

டாபிக்ஸ்