HT Yatra: கண்ணீர் விட்ட பாதுகை.. உலகத்தையே தலை சாய வைத்த விஷ்ணு பகவான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: கண்ணீர் விட்ட பாதுகை.. உலகத்தையே தலை சாய வைத்த விஷ்ணு பகவான்

HT Yatra: கண்ணீர் விட்ட பாதுகை.. உலகத்தையே தலை சாய வைத்த விஷ்ணு பகவான்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 09, 2023 06:15 AM IST

பெருமாள் கோயில்களில் தலையில் வைக்கப்படும் சடாரிக்கு மிகப்பெரிய ஐதீகம் உள்ளது.

சடாரி
சடாரி

மகாவிஷ்ணு கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு, துளசி தீர்த்தம் கொடுக்கப்படும் இடத்தில் பக்தர்களுக்கு தலையில் சடாரி வைக்கப்படும். நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் அதில் பெருமாளின் பாதம் இருக்கும். தலையில் சடாரி வைக்கப்படுவதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய ஐதீகம் இருக்கின்றது. அது என்ன என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சடாரி கதை

 

ஒரு முறை மகாவிஷ்ணு வைகுண்டத்தில் ஆதிசேஷன் மேல் உறங்குவதற்கு முன்பு சங்கு, சக்கரம், திருமுடி ஆகிய மூன்றையும் ஆதிசேஷன் மேல் வைத்துவிட்டு தன்னை தரிசிக்க வந்த தேவர்களை காண சென்று விட்டார். அதேசமயம் முனிவர்களை காண சென்ற அவசரத்தில் தனது பாதுகைகளை( காலணி) ஆதிசேஷன் அருகே வைத்து விட்டு சென்று விட்டார் மகாவிஷ்ணு.

இதனைக் கண்ட சங்கு, சக்கரம், திருமுடி தங்கள் அருகில் இருந்த பாதுகைகளை அவமானமாக பேசி உள்ளன. இதனால் பாதுகைகள் மிகப்பெரிய வருத்தம் கொண்டன. திரும்பி வந்த மகாவிஷ்ணுவிடம் இதுகுறித்து வருத்தப்பட்டு பாதுகைகள் முறையிட்டுள்ளன.

இதனைக் கேட்ட மகாவிஷ்ணு, என்னுடைய படைப்புகளில் அனைத்தும் ஒன்றுதான். பாதுகைகளை அவமானம் செய்த சங்கு, சக்கரம் ஆகியவை நான் எடுக்கும் ராம அவதார காலத்தில் எனக்கு சகோதரர்களாக பிறப்பார்கள். எனது சிம்மாசனத்தில் எனது பாதுகைகளை வைத்து சங்கும், சக்கரமும் அதாவது பரதன், சத்ருகனன் இருவரும் 14 ஆண்டுகள் பூஜை செய்து தங்களது கர்ம வினைகளை தீர்ப்பார்கள் என கூறினார்.

இதன் அடிப்படையில் விஷ்ணு பகவானின் தலையை எப்படி திருமுடி அலங்கரிக்கின்றதோ, அதேபோல அவரது மலர் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் சிறப்பானவை தான் என்ற தத்துவம் உருவானது. இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் பக்தர்களின் தலைமீது சடாரி வைக்கப்பட்டு ஆசி கொடுக்கப்படுகிறது.

இங்கு அனைவரும் சமம் தான் என்றும், கர்வம் நீங்கி சமமான மனநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சடாரி தலையில் வைக்கப்படுகிறது. இறைவன் முன்னிலையில் பணக்காரன், ஏழை, தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்ற பாகுபாடுகள் கிடையாது. அந்த தத்துவத்தை உணர்த்துவதற்காகவே பாதம் பொறிக்கப்பட்ட சடாரி பாரபட்சம் இன்றி அனைவரது தலையிலும் வைக்கப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் 12 ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாரை பெருமாளின் திருப்பாதங்களாக நினைத்து பக்தர்களுக்கு இந்த சடாரி தலையில் வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner