HT Temple SPL: மனம் நிறைய அருள் புாிவாள் சூரம்பட்டி வலசு மகா மாரியம்மன்!
Surampatti Valasu Maariyamman: ஈரோடு வலசு மாரியம்மனை தரிசித்தால், பக்தர்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்று சூரம்பட்டி வலசு பகுதியில் அமைந்துள்ள சுயம்பு மகா மாரியம்மன் கோயில். சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் அம்மன். சன்னதியை நெருங்க நெருங்க கற்பூரம், எலுமிச்சை வாசனையும் நம்மோடு சேர்ந்து பயணிக்க ஆரம்பிக்கும். பல நிறங்களால் ஆன அம்மன் சேலை கண்களுக்கு அற்புத காட்சியளிக்கும்.
கருணையும், தாய்மையும் ஒருங்கே அமைந்தது அம்மனின் முகம். மனம் முழுக்க குழப்பம், கண்கள் முழுக்க கண்ணீர் என உங்கள் உள்ளத்தில் இருக்கும் வலிகளை அம்மனிடம் வேண்டுதல்களாக வையுங்கள். அம்மன் நிச்சயம் செவிசாய்ப்பாள். தல விருட்சமாக அரசமரம் உள்ளது. அதற்கு அருகே விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். அவரிடம் நல்ல புத்தி வேண்டி ஒரு விண்ணப்பத்தை வையுங்கள். நீங்கள் வந்த வழியை வைத்துத்தான் அம்மன் இனி வரப்போகும் வழியை திறந்துவிடுவாள். நல்ல மனதுடன் பிரகாரத்தில் நடந்து வாருங்கள். பிரச்னைகள் எல்லாம் கடந்து வருவீர்கள். பிறகு பாருங்கள் எல்லாம் நல்லதே நடக்கும்.
திருவிழாவின் போது காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் கொண்டு வரும் தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஏனேனில் காவிரி ஆறும் நமக்கு ஒரு தாய்தானே.. காவிரித்தாயால் நமது வயிறு நிறைகிறது. மாரித்தாயால் நமது மனம் நிறைகிறது.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நவராத்திரி, மார்கழி திருவிழா போன்ற நாட்களில் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். கோயில் நடை காலை 6 மணி முதல் 12:30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மிக நூல்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்