Karthigai Deepam Special: தி.மலையில் ‘மகா தீபம்’ ஏற்றுவது எதற்காக தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karthigai Deepam Special: தி.மலையில் ‘மகா தீபம்’ ஏற்றுவது எதற்காக தெரியுமா?

Karthigai Deepam Special: தி.மலையில் ‘மகா தீபம்’ ஏற்றுவது எதற்காக தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Nov 25, 2023 07:01 AM IST

'கார்த்திகை மாதத்தில் தீப தரிசனம் பாப விமோசனம்' என்பர். வீடு மற்றும் திருக்கோயில்களில் நாள்தோறும் விளக்கு ஏற்றுவது மிக அவசியம்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா

'கார்த்திகை மாதத்தில் தீப தரிசனம் பாப விமோசனம்' என்பர். வீடு மற்றும் திருக்கோயில்களில் நாள்தோறும் விளக்கு ஏற்றுவது மிக அவசியம். காலை, மாலையில் வீட்டில் விளக்கேற்றும் கடமை பெண்களுக்கு உரியது. அது எவ்வளவு உயரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வாழ்வும் உயரும் என்பது ஐதீகம்.

கார்த்திகை தீபம் என்றவுடன் நினைவில் எழுவது திருவண்ணாமலை தீபத்திருவிழா தான். சிவபெருமான் முப்புரங்களை எரித்த நாளே கார்த்திகைத் தீபமாகக் கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் அழலுருவாகத் தோன்றியதன் காரணமாக கார்த்திகைத் தீப பெருவிழா கொண்டாடப்படுகிறது என்று சொல்லுவோரும் உண்டு.

ஆண்டுதோறும் திருக்கார்த்திகைத் தீபப்பெருவிழாவின் போது பத்தாம் நாளாகிய தீப தரிசனத்தன்று சூரியோதய காலத்திற்கு முன்பு பரணி தீபமும் மாலை பிரதோச காலத்தில் அர்த்தநாரீசுவரர் எழுந்தருளி காட்சி கொடுக்கும் அவ்வேளையில், மலையின் உச்சியில் சோதி தரிசனமும் நடைபெறும். அதேநேரத்தில் ஆலயத்தில் பஞ்சமூர்த்திகளுக்குத் தீபாரதனை செய்வித்தலும் நிகழும்.

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபம் போல் பிரசித்தி பெற்ற ஒருவிழா இவ்வுலகில் வேறு எங்கும் காண முடியாது என்பது நிச்சயம். 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஆறு அடி உயர ராட்சத செப்புக் கொப்பரையில் வைத்து அதில் நெய், கற்பூரம், கோடி வெள்ளைத் துணி ஆகியவற்றின் மூலம் மகா தீபம் ஏற்றுகிறார்கள். இந்த தீபத்தின் ஒளி சுற்றுவட்டாரத்தில் 20 கிலோ மீட்டருக்கும் அப்பாலும் தெரியக்கூடியது.

எதற்காக தீபம் ஏற்றுகிறார்கள் தெரியுமா..சின்ன அகலாக இருந்தால் அதன் பிரகாசம் கொஞ்ச தூரமும், சொக்கப்பனை என்றால் அதன் பிரகாசம் ரொம்ப தூரத்துக்குத் தெரியும். இதுவே அண்ணாமலை தீபம் மாதிரி மலையில் ஏற்றினால் பல ஊர்களுக்கு தெரியும். இதனால் அந்த எல்லைக்குள் இருக்கும் சகல உயிர்களுக்கும் இந்தப் பிரகாசம் பட்டு அதன் பாவங்கள் போகும் என்பதும் ஐதீகம். இப்படி சாதரணமாக இரண்டு, நான்கு கால் உயிரினங்களின் பாவமும் போக வேண்டுமே என்றே முன்னோர்கள் இதை ஏற்படுத்தியுள்ளனர். திருவண்ணாமலையில் மகா தீபத்தை ஏற்றுவதால் புயல் ஏற்பட்டாலும் அதன் வேகம் தடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. புயல் போல துன்பங்கள் வந்தாலும் தீபதரிசனம் செய்தால் அது நீங்கிவிடும் என்ற தத்துவத்தையும் இது உணர்த்துவதாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner