Lord Murugan: ஒரே மேடையில் மூன்று கடவுளுக்குத் திருமணம் - சிக்கலைப் போக்கும் சிக்கல் சிங்காரவேலன் கோயில்!
சிக்கல் சிங்காரவேலன் திருக்கோயிலில் இன்று குடமுழுக்கு திருவிழா நடைபெறுகிறது.
தமிழ் மக்களுக்கு முருகப்பெருமான் மீது எப்போதுமே ஒரு தனி பிரியம் உண்டு. முருகப் பெருமானுக்கு ஒரு கடவுளாகப் பார்க்காமல் தனது குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக அனைவரும் பார்ப்பார்கள் அதுவே இந்த தனித்துவமான காதலுக்குக் காரணம்.
உலகம் முழுவதும் முருகப்பெருமானுக்குப் பல சிறப்பான கோயில்கள் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்பான கோவில்களில் ஒன்றுதான் சிக்கல் சிங்காரவேலன் திருக்கோயில். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக ஏழாவது படை வீடாய் கூறப்படும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் இதுவும் ஒன்று. தனது தந்தை வீற்றிருக்கும் சிக்கல் நவநீதேஸ்வரர் கோயிலில் தனி சன்னதி பெற்று வீற்றிருக்கிறார் இந்த சிக்கல் சிங்காரவேலன்.
அமைவிடம்
இந்த கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு அருகே சிக்கல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோயில் அமைந்துள்ளது.
தல வரலாறு
விண்ணுலகத்தில் இருக்கக்கூடிய காமதேனு பசு பஞ்சம் காரணமாக ஒரு முறை மாமிசம் சாப்பிட்டு விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் பசுவிற்குச் சாபம் கொடுத்தார். இதனால் கவலையான காமதேனு இறைவனிடம் சாப விமோசனம் கேட்டது.
பூலோகத்தில் மல்லிகை வனம் உள்ளது. அங்கு உள்ள தலத்தில் நீராடி, தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை வழிபட்டால் உனக்குச் சாப விமோசனம் கிடைக்கும் எனச் சிவபெருமான் அருள் ஆசி வழங்கி உள்ளார்.
அப்படி சிவபெருமான் கூறியபடி அங்கு இருந்த குளத்தில் நீராடி காமதேனு சாப விமோசனம் பெற்றது. அப்போது காமதேனு பசுவின் மடியில் இருந்து பெருகிய பால் குளமாக உருவாகியது. அந்த பாலில் இருந்து கிடைத்த வெண்ணெய்யை வைத்து வசிஷ்ட மாமுனி ஒரு சிவலிங்கம் செய்தார்.
அவருடைய பூஜை முடிந்த பின்பு சிவலிங்கத்தை எடுக்க முற்பட்டபோது அது அந்த இடத்திலேயே சிக்கிக்கொண்டது. அதன் காரணமாகவே அந்த ஊருக்குச் சிக்கல் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கும் முருகன் தான் சிக்கல் சிங்காரவேலன். அளிப்பதற்காக முருகப்பெருமான் பார்வதி தேவியிடம் வேல் வாங்கிய இடம் இதுவென்று புராணங்கள் கூறுகின்றன.
இந்த கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறும் பொழுது அம்பாளியிடம் இருந்து முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது முருகப்பெருமான் வேல் பெரும் ஒவ்வொரு முறையும் அவருக்கு வியர்ப்பதைக் கண்கூடாகப் பக்தர்கள் கண்டதாகக் கூறுகின்றனர்.
இந்த கோயிலில் இருக்கும் சிக்கல் சிங்காரவேலன் அம்மை அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இந்த முருகப் பெருமானை வழிபட்டால் வாழ்வில் வரக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
குடமுழுக்கு
இந்த கோயிலில் முக்கிய இடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களும் திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் குடமுழுக்கு திருவிழா நடைபெறுகிறது. இதில் மேலும் சிறப்பு என்னவென்றால் சிவபெருமான், முருகப் பெருமான் மற்றும் பெருமாள் ஆகியோருக்கு ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடக்கின்றது.
டாபிக்ஸ்