HT Temple SPL: தன்னிகரில்லா தஞ்சை பெரிய கோயில் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Temple Spl: தன்னிகரில்லா தஞ்சை பெரிய கோயில் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

HT Temple SPL: தன்னிகரில்லா தஞ்சை பெரிய கோயில் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Dec 04, 2023 07:00 AM IST

Thanjavur Big Temple: தஞ்சாவூர் பெரிய கோயில் பற்றிய வியக்க வைக்கும் சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

தஞ்சாவூர் பெரிய கோயில்
தஞ்சாவூர் பெரிய கோயில் (Gettyimage)

தஞ்சைப் பெருவுடையார் கோயில், பிரகதீஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும். சோழ நாடு சோறுடைத்து என்று தரணி போற்றும் உழவுத் தொழிலையும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் உலகிற்குப் பறைசாற்றிய மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட திருக்கோயில் தன்னிகரில்லா தஞ்சை பெரிய கோயில் அருள்மிகு பிரகதீசுவரர் திருக்கோயில் ஆகும்.

இத்தலத்தின் தல விருட்சமாக வன்னி மரமும், தலத் தீர்த்தமாக சிவகங்கைத் தீர்த்தமும் விளங்குகின்றன. விஞ்ஞான தொழில் நுட்ப ரீதீயாக கட்டுமானத்துறையில் வளர்ச்சி காணாத காலங்களில் சுமார் 1000 ஆண்டுகள் முன்னதாக அதாவது 10ஆம் நூற்றாண்டில், அப்போது சோழ அரசராக விளங்கிய அருள்மொழி வர்மன் என்ற ராஜ ராஜ சோழன் கட்டினார். இத்திருக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடியதாகும். இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

இத்திருக்கோயிலின் பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் சந்நிதியில் சிவபெருமான் லிங்க வடிவில் உள்ளார். இம்மூலவருக்கு பீடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாள் பெரியநாயகி சந்நிதியும், கருவூர் சித்தர் சந்நிதியும் இங்கே அமையப் பெற்றுள்ளன. இக்கோயிலில் கருவூர் சித்தருக்கென தனிச் சந்நிதி அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். இத்தலத்தில் அமைந்துள்ள வராகி அம்மன் சந்நிதியில் வேறெங்கிலும் இல்லாத வகையில் இந்த திருவுருவிற்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது வியப்புக்குரியது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் தமிழ்ப் பற்று என்பது அளவிடமுடியாத ஒன்று ஆகும். அதற்கு சான்றாக இத்திருக்கோயிலில் அமையப்பட்டுள்ள ஒவ்வொரு அமைப்புகளும் அதனைப் பறைசாற்றிய வண்ணம் உள்ளன. உதாரணமாக தமிழின் உயிர் எழுத்துக்கள் 12 என்பதைக் குறிக்கும் வகையில் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடியாகவும், தமிழின் மெய் எழுத்துக்கள் 18 என்பதைக் குறிக்கும் வகையில் லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடியாகவும், தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216 என்பதைக் குறிக்கும் வகையில் கோயிலின் கோபுரத்தின் உயரம் 216 அடியாகவும், தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 அடியாகவும் நிர்மாணித்து இருப்பது உலகில் வேறு எங்குமே காண இயலாத சிறப்பு ஆகும்.

இங்குள்ள நந்தி சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும். இது 13 அரி நீளமும், 9 அடி உயரமும் கொண்ட சிலை. கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ஒருவரால் அமைக்க முடியும் என்றால் அது ராஜ ராஜ சோழன் என்றால் அது மிகையாகாது..!

மேலும், இந்த கோயிலின் மிக முக்கியச் சிறப்பு, கோயிலின் கோபுர நிழலான நண்பகல் நேரத்தின் உத்திராயணத்தில் தரையில் விழாது.இன்றளவும், இதன் பின்னணி விஞ்ஞானிகள் போதுமக்கள் அனைவருக்குமே பிரமிக்கவைக்கும் மர்மமாகவே உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இத்திருக்கோயில் 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்