Marundheeswarar Temple: தீராத நோய்களை தீர்க்கும் சென்னை மருந்தீஸ்வரர்!
சுமார் 1,300 ஆண்டுகள் பழைமையைக் கொண்டு திகழும் சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயிலின் சிறப்புகள் பற்றி இங்கு காண்போம்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் உள்ளிட்டோரால் பாடல்பெற்ற தலம் சென்னை திருவான்மியூரில் உள்ள திரிபுரசுந்தரி அம்மை உடனுறை மருந்தீஸ்வரர் கோயிலாகும். தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற 274 சிவன் கோயில்களில் 258-வது தேவாரத் தலமாக இத்தலம் விளங்குகிறது.
சுமார் 1,300 ஆண்டுகள் பழைமையைக் கொண்டு திகழும் இந்தத் திருத்தலம் அப்பர், சம்பந்தர் ஆகிய சமயக்குரவர்களும் சேக்கிழார், அருணகிரிநாதர் போன்ற மகான்களும் போற்றிப் பாடிய சிறப்பை உடைய மிகப் பழமையான கோயிலாக இது கருதப்படுகிறது. விமானம் ஐந்து அடுக்கு கொண்ட ராஜகோபுரமும் இங்கு சிறப்பானவை.
மருந்தீஸ்வரரான சிவபெருமானுக்கு இங்கு பொங்கல் நைவேத்யம் செய்யப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களஅ, கர்ம வினையால் பிரச்னைக்கு ஆளானவர்கள் இங்குள்ள வன்னி மரத்தை சுற்றி வந்து மருந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். அதில், பிரசாதமாக தரப்படும் விபூதியை பூசுகின்றனர். பக்தர்கள் பங்குனி பிரமோற்சவம், சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, பவுர்ணமியன்று வன்னி மரத்தடியில் கூடுகின்றனர்.
இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் சிவபெருமானை வணங்கி தவம் இருந்தார். தினமும் சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கு உதவியாக இந்திரன் தன் பசுவான காமதேனுவை அனுப்பி வைத்தார். தினமும் சரியான நேரத்திற்கு வந்த காமதேனு ஒருநாள் வர தாமதமானது. கோபம் கொண்ட வசிஷ்ட முனிவர் காமதேனுவின் தெய்வீக சக்தியை நீக்கியதோடு பூலோகத்தில் இருக்கும்படி சபித்தார். தன் செயலுக்கு வருந்திய காமதேனு இங்குள்ள வன்னி மரத்தடியில் சிவபெருமானை வணங்கி தவமிருந்தது. பாலால் சிவனுக்கு தொடர்ந்து அபிஷேகம் செய்ததால் வெள்ளை நிறத்தில் சிவன் காட்சியளித்தார். இதனால் அவரை 'பால்வண்ணநாதர்' என அழைக்கின்றனர்.
வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன், உலகில் தோன்றியுள்ள நோய்கள் பற்றியும், அதற்கான மருந்துகளையும், மருந்துகளை தயார் செய்வதற்கான மூலிகைகளையும் பற்றி உபதேசித்தார். எனவேதான் இத்தலம் ‘மருந்தீஸ்வரர்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மற்ற தலங்களைக் காட்டிலும் இக்கோயிலின் வட மேற்கில் உள்ள வன்னி மரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு.
மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் சாப்பிட்டால், எவ்வித நோயாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். அகத்திய முனிவருக்கு அம்பிகையுடன் திருமணக்கோலத்திலும், வான்மீகி முனிவருக்கு முக்திப்பேறு தருவதற்காக லிங்க வடிவிலும் சுவாமி காட்சி அளித்தார். இந்த மரத்தை சுற்றி வந்தால் நோய் தீர்வதோடு முக்திப்பேறும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்