திருப்பதியில் உள்ள 7 மலைகள் என்னென்ன? - அதன் சிறப்புகள் என்ன? - முழு விபரம் உள்ளே!
Tirupati Temple: திருமலை திருப்பதியில் உள்ள ஏழு மலைகளின் பெயர்களும் அதன் சிறப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும் என்றால் ஏழு மலைகளை கடந்துதான் செல்ல வேண்டும். இப்படி மலைகளை மையமாக்கி பெருமாள் இருப்பதால் இவருக்கு 'மலையப்பர்', 'மலை குனிய நின்றான்' என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. அந்த மலைகள் என்னென்ன? அதன் சிறப்புகள் பற்றி பார்ப்போம்.
விருஷாத்ரி மலை
விருஷன் என்னும் அரசன் மோட்சத்தை அடைய இம்மலைக்கு வந்து தவம் செய்தார். அவனது பெயரில் இம்மலை 'விருஷாத்ரி' எனப் பெயர் பெற்றது.
விருஷபாத்ரி மலை
விருஷபன் என்ற அசுரன் பெருமாளுடன் சண்டையிட்டான். இறுதியில் தன் தவறை உணர்ந்து இதற்கு பரிகாரமாக பக்தர்களின் பாதம் படும் இடத்துக்குத் தன் பெயரை வைக்கும்படி வேண்டினான். அதன்படி, அவனது பெயரில் இது ‘விருஷபாத்ரி மலை’ எனப் பெயர் பெற்றது.
கருடாத்ரி மலை
கருடாழ்வார் தன் பாவத்தை போக்க இங்கு தவம் செய்தார். அதனால் இது 'கருடாத்ரி மலை' எனப் பெயர் பெற்றது.
அஞ்சனாத்ரி மலை
குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி அஞ்சனாதேவி தவம் செய்த மலை. அந்தக் குழந்தைதான் ஆஞ்சநேயர். இவளது பெயரில் ஏற்பட்ட மலை 'அஞ்சனாத்ரி மலை' எனப்படுகிறது.
நாராயணாத்ரி மலை
பூலோகத்தில் பெருமாள் தங்குவதற்காக நாராயண மகரிஷியால் அடையாளம் காட்டப்பட்ட மலை இது.
வேங்கடாத்ரி மலை
வேம் + கடம் = வேங்கடம். வேம் - பாவம், கடம் - எரிபடுதல். அதாவது இந்த மலையில் நமது பாதங்கள் பட்டதும் பாவங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்பது பொருள். பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு 'வேங்கடாத்ரி மலை' என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு கோலத்தில் காட்சி தருகிறார்.
சேஷாத்ரி மலை
மஹாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளார். அதைப்போலவே இங்கும் ஆதிசேஷனே மலையாக இருக்கிறார். அதன் மீது வெங்கடேசப் பெருமாள் காட்சி தருகிறார். இவரது அழகை காண்போரின் கண்கள் குளிர்ச்சியாகும். வாழ்வு இனிமையாகும். இவர் மீது பக்தி கொண்ட குலசேகராழ்வார் இங்குள்ள குளத்தில் நாரையாகப் பிறக்க வேண்டும் என வேண்டுகிறார். இது ஆதிசேஷன் பெயரால் 'சேஷாத்ரி' என்று அழைக்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்