HT Yatra: அக்னி பகவானுக்கு துயரம்.. ஆறுதல் கூறிய சிவபெருமான்.. வேண்டுதலால் வந்த சோழீஸ்வரர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: அக்னி பகவானுக்கு துயரம்.. ஆறுதல் கூறிய சிவபெருமான்.. வேண்டுதலால் வந்த சோழீஸ்வரர்

HT Yatra: அக்னி பகவானுக்கு துயரம்.. ஆறுதல் கூறிய சிவபெருமான்.. வேண்டுதலால் வந்த சோழீஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 28, 2024 06:20 AM IST

HT Yatra: தமிழ்நாடு முழுவதும் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட எத்தனையோ கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்.

அக்னி பகவானுக்கு துயரம்.. ஆறுதல் கூறிய சிவபெருமான்.. வேண்டுதலால் வந்த சோழீஸ்வரர்
அக்னி பகவானுக்கு துயரம்.. ஆறுதல் கூறிய சிவபெருமான்.. வேண்டுதலால் வந்த சோழீஸ்வரர்

குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு தனி பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. வழிபாடுகள் வித்தியாசமாக நடத்தப்பட்டாலும் திரும்பும் திசை எல்லாம் இந்தியாவில் சிவபெருமானுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதிலும் தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்திலிருந்து இன்றுவரை சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்த வருகிறது. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வாழ்ந்தாலும் அனைத்து மன்னர்களுக்கும் சிவபெருமான் குலதெய்வமாக திகழ்ந்து வந்துள்ளார். மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த ராஜராஜ சோழன் மிகப்பெரிய சிவபெருமானின் பக்தனாக திகழ்ந்து வந்துள்ளார். அதனை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு கலை நுட்பங்களை உள்ளே புகுத்தி மிகப்பெரிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிவபெருமானுக்காக கட்டியுள்ளார்.

இதுபோல தமிழ்நாடு முழுவதும் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட எத்தனையோ கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த கோயிலில் வைத்திருக்கக்கூடிய சிவபெருமான் சோழீஸ்வரர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறார். தாயார் பரிமளசுகந்த நாயகி என அழைக்கப்படுகிறார். இந்த திருக்கோயில் தேவார வைப்பு தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் சனீஸ்வர பகவான் சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது இவர் பாதாள சனீஸ்வரன் என அழைக்கப்படுகிறார் கையில் அமிர்த களம் ஏந்தி அருள்பாலிப்பது மிகவும் சிறப்புமாகும்.

இந்த கோயிலின் சிறப்பு என்னவென்றால் திருமணமாகாமல் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. அதற்குப் பிறகு திருமணம் முடிவு செய்யப்பட்ட பின்பு அது சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காகவும் இங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய நோய்களை நிவர்த்தி செய்யும் தலமாகவும் இது விளங்கி வருகிறது.

தல வரலாறு

அந்த காலம் தொடங்கி தற்போது வரை யாகங்கள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த யாகங்கள் அனைத்தும் அக்னி பகவான் மூலமாக சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற நேரங்களில் அக்னி பகவான் போற்றப்பட்டவர். ஆனால் அக்னி பகவானால் அழியக்கூடிய பொருள்களால் பலரும் அவரை தூற்றுகின்றனர்.

நெருப்பால் ஏற்படக்கூடிய அழிவினால் பழிச்சொல்லுக்கு ஆளாகின்ற காரணத்தினால் அக்னி பகவான் வருத்தத்தில் ஆழ்துள்ளார். இதிலிருந்து விடுதலை பெறுவதற்காக சிவபெருமானை நோக்கி வேண்டியுள்ளார். உடனே சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்துள்ளார்.

அதற்குப் பிறகு சிவபெருமான், தாமே அக்னியாக இருக்கின்றோம். எனது வேலையை நான் சரியாக செய்து வருகிறேன். நெருப்பால் ஏற்படக்கூடிய நன்மை மற்றும் தீமைகள் அனைத்திற்கும் நானே காரண கர்த்தாவாக விளங்கி வருகின்றேன் எனக்கூறி அக்னி பகவானின் ஆசுவாசப்படுத்தியுள்ளார்.

அதற்குப் பிறகு அக்னி பகவான் சிவபெருமானிடம் வேண்டி எனது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக தாங்கள் இங்கே லிங்கமாக எழுந்து அருள வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு இணங்கி சிவபெருமான் இங்கு அக்னீஸ்வரராக காட்சி கொடுத்தார். இவர் சோழீஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார். இந்த கோயிலின் தல விருச்சமாக உத்தால மரம் விளங்கி வருகிறது. இந்த மரத்தின் பெயரில்தான் இந்த ஊர் அழைக்கப்பட்டது. பின்னாளில் அது மருவி குத்தாலம் என அழைக்கப்பட்டது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner