தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ekadashi: வைகாசி முதல் நாளே விசேஷமா? - ஏகாதசியோடு தொடங்கிய மாதம்

Ekadashi: வைகாசி முதல் நாளே விசேஷமா? - ஏகாதசியோடு தொடங்கிய மாதம்

Suriyakumar Jayabalan HT Tamil
May 15, 2023 11:08 AM IST

வைகாசி வருதினி ஏகாதசி விரதம் மேற்கொண்டால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கே காண்போம்.

 வருதினி ஏகாதசி விரதம்
வருதினி ஏகாதசி விரதம்

மற்ற மாதங்களில் வரக்கூடிய ஏகாதேசி தினங்களைப் போலவே வைகாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி தினத்திற்குப் பல சிறப்புகள் உண்டு. இந்த வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை ஏகாதசி தினத்தின் மகிமைகள் குறித்து இங்கே காண்போம். மேலும் இந்த சிறப்பான நாளில் நாம் செய்ய வேண்டிய சில வழிபாடு முறைகள் குறித்து இங்கே காண்போம்.

வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி உண்டென்றால் அது வருதினி ஏகாதசி தினமாகும். மற்ற ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த சிறப்பான தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மேலும் சிறப்பு எனக் கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில் மந்தத்தன் என்கின்ற அரசன் இந்த வருதினி ஏகாதசி விரதத்தை மிகவும் சிறப்பாகக் கடைப்பிடித்துப் பல பலன்களை தன் வாழ்வில் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

விரத முறை

இந்த ஏகாதசி தினத்தில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்தை அலங்காரம் செய்து துளசி இலைகள் மற்றும் பசுந்தயிர் கொண்டு நெய் நைவேத்தியம் செய்ய வேண்டும். தீபமேற்றி மந்திரங்களைத் துதித்து வழிபாடு செய்ய வேண்டும்.

பொதுவாக ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் தினமன்று காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இருந்தால் நமது வேண்டுதலுக்கு மிகுந்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

முழுமையான விரதத்தை மேற்கொள்ள முடியாதவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது நீராகாரம் போன்றவற்றைக் குறைத்து எடுத்துக் கொண்டு இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். விரதம் மேற்கொள்ளும் இந்த நாளில் போதைப் பொருட்கள் ஏதும் பயன்படுத்தாமல் இருந்தால் அதீத பலன்கள் கிடைக்கும்.

பின்னர் மாலை நேரத்தில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி தீபம் ஏற்று வழிபாடு செய்ய வேண்டும். உறுப்பினர் வீட்டிற்கு வந்த பிறகு பூஜை அறையில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்வதற்காக வைக்கப்பட்ட துளசி இலைகளைச் சிறிதளவு பிரசாதமாக மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டு விரதம் மேற்கொண்டவர்களும் அதைச் சிறிது சாப்பிட்டு ஏகாதசி விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி விரதத்தை முழுமையாக மேற்கொண்டால் மனநலமும் உடல் நலமும் சீராகும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், அனைத்து சிக்கல்களும் நீங்கும், நினைத்த காரியம் நிறைவேறும் எனப் பக்தர்களால் நம்பப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

 

WhatsApp channel

டாபிக்ஸ்