தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aadi Month Special: ஆடி மாதத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? - வாங்க பார்க்கலாம்

Aadi Month Special: ஆடி மாதத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? - வாங்க பார்க்கலாம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 24, 2023 12:40 PM IST

ஆடி மாதத்தின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

ஆடி மாதத்தின் சிறப்புகள்
ஆடி மாதத்தின் சிறப்புகள்

இந்த காலத்தில் பகல் பொழுது மிகவும் குறைவாக இருக்கும். இரவு நேரம் அதிகமாக இருக்கும். காற்று மிகவும் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆடி செவ்வாய் தினத்தன்று தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு விரதம் இருந்து வழிபாடு செய்தால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

உலகம் முழுவதும் ஆடி மாதம் விழாக் கோலமாகக் காணப்படும். குறிப்பாகத் தமிழ்நாடு முழுவதும் திருவிழாக் காலம் தான். குறிப்பாக மாரியம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆடி அமாவாசை தினத்தில் குடும்பத்தின் முன்னோர்களுக்குத் திதி கொடுப்பது அதீத புண்ணியத்தைத் தேடித் தரும் என்பது ஐதீகமாகும்.

ஆடி பதினெட்டாம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாக அந்த நாளில் ஆற்றங்கரை ஓரம் அல்லது கடற்கரை ஓரங்களில் குடும்பத்தினர் அமர்ந்து இரவு உணவு உண்பது மரபாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாகப் புதுமண தம்பதிகள் நதிக்கரையில் அமர்ந்து நிலாச் சோறு உண்பார்கள். அன்றைய தினம் சுமங்கலிப் பெண்கள் தங்களது புது தாலியை மாற்றிக் கொள்வது வழக்கம். திருமணமாகாத பெண்கள் அன்றைய தினம் அம்மனை வழிபாடு செய்து திருமணமாக வேண்டும் என மஞ்சள் கயிறு கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

அதேபோல விவசாயிகளுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. இந்த மாதத்தில் தான் தங்களது பயிர் விதைக்கும் பணிகளைத் தொடங்குவார்கள். ஆடி மாதம் தொடங்கியது முதல் தைப்பொங்கல் திருநாள் வரை தமிழ்நாடு முழுக்க திருவிழாக் கோலமாக இருக்கும்.

தேவர்களின் மாலைக்காலமாக விளங்கக்கூடிய ஆடி மாதத்தில் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாக விளங்கக்கூடிய அம்பிகை அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தார் என புராணங்கள் கூறுகின்றன.

இந்த மாதத்தில் செய்யக்கூடிய அனைத்து தானங்களும் இரட்டிப்பு பலன்களைத் தரும் என ஆன்மீகம் கூறுகிறது. அதேபோல தங்களது வேண்டுதல்களை இறைவனடி சேர்த்தால் அந்த வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் என்பதும் ஐதீகமாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்