தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  முகூர்த்த நாட்களில் குருவாயூரில் அலைமோதும் பக்தர்கள் - கட்டுப்படுத்த முடிவு!

முகூர்த்த நாட்களில் குருவாயூரில் அலைமோதும் பக்தர்கள் - கட்டுப்படுத்த முடிவு!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 10, 2023 11:22 AM IST

Guruvayur Temple: குருவாயூர் கோயிலில் முகூர்த்த நாட்களில் இரவு நேரங்களிலும் திருமணங்கள் நடத்த ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

குருவாயூர்
குருவாயூர்

இந்த கோயிலில் ஒரே நாளில் 250 திருமணங்கள் வரை நடந்துள்ளன. திருப்பதி கோயில் போல எப்போதும் இந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சுப முகூர்த்த நாட்களில் அதிகாலை 5 மணிக்குத் தொடங்கும் திருமண நிகழ்ச்சிகள் பகல் 1.30 மணி வரை நடைபெறும்.

இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் மணமக்களுக்குத் திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்ற காரணத்தினால் கோயிலில் கூட்டம் அதிகரித்து வருகின்றன. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களால் சுவாமியைத் தரிசனம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்த சிக்கலான சூழ்நிலைக்குத் தீர்வு காணும் வகையில் கோயில் நிர்வாகம் இரவு நேரங்களிலும் சுப முகூர்த்த நாட்களில் கோயிலில் திருமணங்கள் நடத்துவது குறித்து யோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் ஒன்று கூடி விரைவில் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் கோயில் தந்திரிகளிடம் கருத்துக் கேட்ட பிறகு இறுதியாக முடிவு செய்யப்படும் எனக் கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளா மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் இந்த குருவாயூர் கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. பூமியில் இறைவன் விஷ்ணு, வாசம் செய்யும் தலமாக இது போற்றப்படுகிறது. பக்தர்களால் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம் எடுப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு அன்னை தேவகியும், தந்தை வாசுதேவரும் குருவாயூர் கோயிலில் உள்ளவாறு தோற்றமளித்தனர். அதன் காரணமாக இந்த கோயில் தென்னிந்தியாவின் துவாரகா என அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயிலில் வடக்குப் புறத்தில் அமைந்திருக்கும் புனித குளத்தில் பரமசிவன் ருத்ர அவதாரத்தில் தண்ணீரில் அமர்ந்து கொண்டு பல ஆண்டுகளாக மகாவிஷ்ணுவை வேண்டி தியானம் இருந்தார். அதன் காரணமாக இந்த கோயிலின் தீர்த்தமானது ருத்ர தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் பூக்கும் தாமரை மலர் மிகவும் பிரசித்தி பெற்றதாகத் திகழ்ந்து வருகிறது.

இந்த கோயிலில் வீற்றிருக்கும் இறைவனின் சிற்பமானது நான்கு கைகளுடன் அனைவரையும் கவரும் வகையில் காணப்படுகிறது. இந்த கிருஷ்ணனின் சிலை மகாவிஷ்ணுவின் கம்பீரமான அவதாரத்தைக் குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அதன் காரணமாக இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்க்கு வந்து செல்கின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்