Temple Festival: காளியம்மன் கோயில் திருவிழா: உடம்பில் சேற்றை பூசி பக்தர்கள் வழிபாடு!
Kaliyamman Temple Festival: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உடலில் சேறு பூசி கொண்டாடப்படும் வினோத திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு உடம்பில் மஞ்சள் மற்றும் சேற்றைப் பூசிக்கொண்டு பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை அடுத்த புதூர், கந்தசாமிபுரத்தில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழாவானது கொடியேற்றத்துடன் துவங்கி கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.
இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக ஆண்கள் உடம்பில் சேற்றை பூசிக்கொண்டு ஊரை வலம்வருவது வழக்கமான பாரம்பரிய நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன்படி, விழாவின் இறுதி நாளில் இக்கோயிலின் விசேஷ நிகழ்வான சேற்றுத் திருவிழா நேற்று (மே 26) வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் தங்களது உடம்பில் மஞ்சள் மற்றும் சேற்றைப் பூசிக் கொண்டு, கைகளில் வேப்பிலையை ஏந்தியவாறு ஊரிலுள்ள பொது கண்மாயில் இருந்து தொடங்கி கிராமம் முழுவதும் சுற்றி இறுதியில் கோயிலை வந்தடைந்தனர்.
இந்த விசேஷ வழிபாடு மஞ்சள் நீர் விளையாட்டுடன் முடிவு பெற்றது. பின்னர் பெண்கள் சிறிய குடங்களில் மஞ்சள் நீர் வேப்பிலையுடன், காளியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்து காளியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு அபிஷேகமும், சிறப்பு தீபாரதனைகளும் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சேற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டால் அந்த மண்ணில் உள்ள நுண் சத்துக்கள் நம் உடலுக்கும் கிடைக்கும் என்பதும் சேற்றுத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்