Temple Festival: உடலில் சேற்றை பூசி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் - எங்கு தெரியுமா?
Temple Festival: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உடல் முழுவதும் சேறு பூசி கொண்டாடப்படும் வித்தியாசமான திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவில் உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வித்தியாசமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சோழபுரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் மழலை செல்வங்கள் 108 இளநீர் மற்றும் 216 பால்குடங்களுடன் ஊர்வலம் வந்து 9 வகை அபிசேகங்களுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ஆண்கள், சிறுவர்கள் உடம்பில் களிமண் சேற்றை பூசிக்கொண்டு ஊரை வலம் வருவது வழக்கமான பாரம்பரிய நிகழ்ச்சியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு "சேற்றுத் திருவிழா" வழக்கமான உற்சாகத்துடன் இன்று (மே 11) கொண்டாடப்பட்டது.
இதில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், சிறுவர்கள் தங்களது உடல் முழுவதும் சேற்றைப் பூசிக் கொண்டு, கைகளில் வேப்பிலையை ஏந்தியவாறு ஊரிலுள்ள பொது கண்மாயில் இருந்து தொடங்கி கிராமம் முழுவதும் சுற்றி இறுதியில் கோயிலை வந்தடைந்தனர். இதில், 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆட்டம், பாட்டத்துடன் கையில் வேப்பிலையுடன் வந்து நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
சேற்றை உடல் முழுவதும் பூசிக் கொண்டால் அந்த மண்ணில் உள்ள நுண் சத்துக்கள் உடலுக்கும் கிடைக்கும் என்பதும், கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் நோய் ஏதும் வராது என்றும் சேற்றுத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்