Coimbatore : கோவையில் யானை தாக்கி இளைஞர் பலி!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore : கோவையில் யானை தாக்கி இளைஞர் பலி!

Coimbatore : கோவையில் யானை தாக்கி இளைஞர் பலி!

Jul 29, 2024 04:21 PM IST Pandeeswari Gurusamy
Jul 29, 2024 04:21 PM IST

  • Coimbatore : கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், அட்டுக்கல் மற்றும் கெம்பனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காட்டு யானைகளை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது குறிப்பாக கெம்பனூர், விராலியூர் பகுதிகளில் ஊருக்குள் புகும் காட்டு யானைகள் தோட்டங்களில் வைக்கப்பட்டிருக்கும் புண்ணாக்கு, தவிடு, மற்றும் ரேஷன் அரிசிகளை சாப்பிடுவது வழக்கமாகி வருகிறது. இந்த யானைகள் வீட்டை உடைத்துக் கொண்டு உணவுப் பொருட்களை தேடுவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் விராலியூர் கிராமத்திற்குள் ஒற்றை ஆண் யானை புகுந்துள்ளது அப்போது ஊருக்குள் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து பூஜைகளை முடித்துக் கொண்டு கோவில் பூசாரி பாஸ்கரன் எதிரே உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென எதிரே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை பாஸ்கரனை தும்பிகையால் தள்ளி தூக்கி வீசியதில் அவர் படுகாயம் அடைந்தார். பாஸ்கரனின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் அங்கு வந்து சத்தம் எழுப்பி யானையை விரட்டி பாஸ்கரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அந்த யானை அருகில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக சென்றபோது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டுக்கொண்டே யானையின் பின்னால் விரட்டிச் சென்றனர் அப்போது திடீரென யானை திரும்பி விரட்டியதில் விராலியூரை சார்ந்த கார்த்திக் மற்றும் அவருடன் சென்ற மற்றொரு இளைஞர் யானையிடம் இருந்து தப்பி ஓடுகையில் கார்த்திகை தும்பிக்கையால் பிடித்து யானை தாக்கியதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு யானையை விரட்டினர் மேலும் இது குறித்து போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடைய ஊருக்குள் புகுந்த யானையை இளைஞர்கள் விரட்டிச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது,அதில் கார்த்திக் தனது நண்பருடன் யானையை துரத்திச் செல்லும் இறுதிக் காட்சிகளும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊருக்குள் அல்லது தோட்டங்களில் யானைகள் புகுந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அதனை பொதுமக்கள் யாரும் விரட்ட கூடாது என அண்மையில் வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More