Padayappa Elephant: ஹாயாக உலா வரும் "படையப்பா" யானை - பீதியில் பொதுமக்கள்!
- மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றித் திரியும் படையப்பா என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை சமீப நாட்களாக தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் சுற்றித் திரிகிறது. கடந்த ஒரு வாரமாக தேவிகுளம் பகுதியில் முகாமிட்டிருந்த படையப்பா யானை சாலையில் நின்று கொண்டு வாகனங்களை வழி மறிப்பதும் விவசாய நிலங்களில் உள்ள வாழை, காரட், முட்டை கோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தும் வருகிறது. இந்த நிலையில் தேவிகுளம் டவுனில் நள்ளிரவில் நுழைந்த படையப்பா யானை, சாலை அருகே உள்ள ஹோட்டலின் முன்பு பரிசோதனை நடத்தி விட்டு சென்றிருக்கிறது. இது அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.