CM Stalin: 'செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது'-மல்யுத்த வீரர்கள் கைதுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்
Wrestlers Detained: ‘போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.’
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இளம் மல்யுத்த வீராங்கனைகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இந்த விவகாரத்தில் டெல்லி போலீசார் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறக்கப்பட்டது. அதை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள்-வீராங்கனை முன்னேறினர்.
அப்போது போலீஸார் எச்சரிக்கையையும் மீறி பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சென்றால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை பாஜக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். நாடாளுமன்ற புதிய கட்டத் திறப்பு விழாவின்போது போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்பு விழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என்று முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
முன்னதாக, வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா என நாடறிந்த மல்யுத்த வீரர்களும், வீராங்கனையும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை தலைநகர் டெல்லியில் ஏற்படுத்தியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணி சென்றனர். அப்போது பாதுகாப்பு வளையத்தை அவர்கள் தாண்டி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள டென்ட்டுகளையும் போலீஸார் அகற்றினர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்