World House Sparrows day : உலக சிட்டுக்குருவிகள் தினம் – உண்மை வரலாறு என்ன?
2010ம்ஆண்டு முதல் மார்ச் 20ம் தேதி உலகசிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகள் அழியும் தருவாயில் உள்ளது அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்நாள் என்றும், சிட்டுக்குருவியினங்கள் உண்மையில் அழியவில்லை.
அதுபோன்ற ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மேம்போக்கான சுற்றுச்சூழலியல் என்றும் ஒரு தரப்பினரும் கூறுகின்றனர். அதன் உண்மை விவரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேன்…. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுபாடு…சிட்சிட்சிட் சிட்டுக்குருவி சில்லென்று போகும் சிறகை தந்தது யாரு… போன்ற பாடல்களை கேட்டும்போதெல்லாம் புள்ளினங்களாய் மாறி வானில் பறக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாதவர்கள் இருக்க முடியுமா?
வீட்டு வாசல்களில் கட்டித்தொங்க விடப்பட்டிருக்கும் நெற்கதிர்களை கொத்திவிட்டு, ஆள் அரவம் கேட்வுடன் பறந்து செல்லும் ஒரு சிறிய பறவைதான் இந்த சிட்டுக்குருவி.
அப்போதைய ஓடு, குடிசை வீடுகளின் விட்டங்களிலும், தாழ்வாரங்களிலும் கூடு கட்டி வசிக்கும். அவை எழுப்பும் சிறிய கீச்கீச் ஒலி நம்மை சிலிர்க்கச்செய்யும். நாகரீகமான இந்த காலத்தில் வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிரூட்டப்பட்ட வீடுகளில், அந்தச்சிட்டுக்குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. உண்மையில் அவை மனிதனை அண்டி வாழும் பறவையினமாம்.
இன்று உலக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் 160 கோடி சிட்டுக் குருவியினங்கள் உள்ளன. இந்தியாவில் லட்சக்கணக்கான சிட்டுக்குருவிகள் உள்ளன. உலகம் மனிதனுக்கு மட்டுமானது அல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது, உரிமையானது. அதனால்தான், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வழிவகை செய்திடல் வேண்டும் என்றார் ராமலிங்க அடிகளார். நாள்தோறும் தமது வாழ்வுக்காக சிட்டுக்குருவிகள் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து, மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக 2010ம் ஆண்டு முதல் சிட்டுக் குருவிகள் தினம் மார்ச் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில் பயோ டைவர்சிட்டி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. மனிதனின் இயற்கைக்கு முரணான நடவடிக்கைகள் இயற்கை பல்லுயிர் சூழலுக்கு தேவையான பல்வேறு உயிரினங்களையும், பல்லுயிர் பெருக்கத்தையும் பாதித்துள்ளது.
பலசரக்குகடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை. வீட்டுத்தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. மேலும் டிராக்டர்கள் பயன்படுத்தி வயல்களில் உழவுப்பணிகள் நடைபெறுவதாலும் மண்ணில் உள்ள சிறுசிறு உயிரினங்கள்கொல்லப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் உணவு இல்லாமல் குருவிகளுக்குஉணவு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இந்நிலையில் ஒரு தரப்பினர் அவை அழியும் தருவாயில் உள்ளது என்ற தவறான தகவல் பரப்பப்படுகிறது. அறிவியல் பூர்வமாக அழிவின் விளிம்பில் உள்ளதாக கூறப்படும் உயிரினங்களின் எண்ணிக்கைக்கும், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கைக்கும் சம்மந்தமே இல்லை. அவை அழிவின் விளிம்பில் இல்லை என்றும், அதற்கு சான்றாக சந்தடி மிகுந்த சென்னை நகருக்குள் சிட்டுக்குருவியினங்கள் காணப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
சிட்டுக்குருவியின் மீதான திடீர் அக்கறை சுற்றுச்சூழல் மீதுள்ள மேம்போக்கான அக்கறையை காட்டுகிறதேயொழிய, உண்மை நிலை வேறு மாதிரி உள்ளதாக தெரிவிக்கின்றன. நெருக்கடி மிகுந்த நகரங்களில் மனிதர்களே பல்வேறு உடல் உபாதைகளுடன் வாழும்போது இயற்கையுடனே ஒன்றிய விலங்கினங்களுக்கு அவை நிச்சயம் கூடுதல் பிரச்னைகளை ஏற்படுத்தத்தான் செய்யும். இயற்கை சூழ்ந்த கிராமங்களையொட்டிய பகுதிகளில் அவை நன்றாகவே வாழ்கின்றனஎன்கிறார்கள்.
சிட்டுக் குருவிதினத்தை போலவே அலைபேசிகளின் வருகைக்குப்பின், குருவிகளின் அழிவு அதிகரித்துவிட்டன. அலைபேசி கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கருவளர்ச்சி அடையாமல் வீணாகிறது என்றெல்லாம் தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவற்றையெல்லாம் எவ்வித அறிவியல் ஆராய்ச்சியும் நிரூபிக்கவில்லை. இந்தக்காரணத்தை பிரபலப்படுத்தியவர் மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த பறவை ஆர்வலர் முகமதுதிவாலர் என்று கூறப்படுகிறது. 2010ம் ஆண்டில் உலக சிட்டுக்குருவிகள் தினத்தை இவர் பிரபலப்படுத்த துவங்கியது முதல் சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மத்திய அரசோ அல்லது ஐநா உள்ளிட்ட எந்த சர்வதேச அமைப்புகளும் அங்கீகரிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
எனினும் இந்நாளை சிட்டுக்குருவிகளை பாதுகாக்கவும், இயற்கையை பாதுகாக்கும் நோக்குடனும் நாம் கொண்டாடலாம்.
டாபிக்ஸ்