Cheating by Jodii app: ஜோடி ஆப் மூலம் வந்த ஆப்பு - முதலிரவில் அபேஸ் செய்த பெண்!
ஜோடி ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு லாரி ஓட்டுநரிடம் இருந்து நகை, பணம், செல்போன் என அனைத்தையும் திருமணம் செய்து கொண்ட பெண் திருடிச் சென்றுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் பகுதியில் சேர்ந்தவர் செந்தில். இவர் லாரி ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரின் மனைவி கடந்த 11 மாதத்திற்கு முன்பு இறந்துள்ளார். இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் செந்தில் ஜோடி ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அதில் பதிவு செய்துள்ளார். அதே ஜோடி ஆப்பிள் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கவிதா என்று பெண் பதிவு செய்துள்ளார். அதன் மூலம் தொடர்பு கொண்ட இவர்கள் இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.
அப்போது கவிதா, தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும் உங்களைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அவ்வப்போது செந்தில் இடம் பணத்தைப் பெற்று வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி அன்று சேலம் வந்த கவிதாவைச் சிவன் கோயிலில் வைத்து லாரி ஓட்டுநர் செந்தில் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் கவிதாவை எடப்பாடி சாரணபட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். முதலிரவு அன்று செந்தில் இடமிருந்த நான்கு அரை பவுன் நகை, வெள்ளிக் கொலுசு, 2,58,000 ரொக்க பணம் ஆகிய பொருட்களை கவிதா திருடித் தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து உடனே செந்தில் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி கவிதா சார்பில் இரண்டு வழக்கறிஞர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளனர். அப்போது திருடிய பொருட்களைத் திருப்பித் தருவதாகச் செந்திலிடம் சமாதானம் கூறிவிட்டு எதையுமே திருப்பி தராமல் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மன உளைச்சல் அடைந்த செந்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாபிக்ஸ்