‘பிரபாகரன் உண்மை நிலை என்ன?’ ஈழ எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலன் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘பிரபாகரன் உண்மை நிலை என்ன?’ ஈழ எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலன் பேட்டி!

‘பிரபாகரன் உண்மை நிலை என்ன?’ ஈழ எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலன் பேட்டி!

HT Tamil Desk HT Tamil
Feb 15, 2023 08:53 AM IST

‘இறுதிப் போரில் பிரபாகரன் நடுக்கடலில் அலையாத்தி காடுகளில் இருந்து போராடிக்கொண்டிருந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது. அது தான் பிரபாகரனின் இறுதி கட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல். சிலர் பிரபாகரன் இல்லை என்று அழுத்து சொல்கிறார்கள், அதற்கும் ஆதாரம் இல்லை. இருக்கிறார் என்பதற்கும் ஆதாரம் இல்லை’

ஈழ எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலன் மற்றும் பிரபாகரன்
ஈழ எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலன் மற்றும் பிரபாகரன்

‘‘2009 மே 18 ம் தேதி பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. இன்று வரை உலகம் முழுதும் வாழ்கின்ற ஈழத் தமிழர்களும், ஆதரவாளர்களும் பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்கிற இருவேறு எண்ணத்தில் தான் வாழ்கின்றனர். அவ்வப்போது பிரபாகரன் இருக்கிறார் என்கிற செய்தி வரும். 

 இப்போது பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். ஆனாலும் அது தொடர்பான எவ்விதமான உறுதிபடுத்தலும் செய்யப்படவில்லை. விபரம் தெரிந்தவர்களுக்கு கூட இந்த சிக்கல் உள்ளது. இறுதிப் போரில் விடுதலை புலிகளுடன் அரசியல் துறையில் இருந்தவரை சந்தித்து பேசிய போது, அவரிடம் இது பற்றி கேட்கலாமா என்கிற எண்ணம் இருந்தது. ஆனாலும் அவரிடம் கேட்க முடியவில்லை.

அண்மையில் இறுதிப் போரில் அரசாங்கத்தோடு இருந்த டக்லஸ்தேவானந்தாவை சந்தித்தேன். அப்போதும் இந்த உந்துதல் ஏற்பட்டது. ஆனாலும் கேட்க முடியவில்லை. பல முக்கியமானவர்களை சந்தித்தும் என்னால் இது பற்றி கேட்க முடியவில்லை. அதனால் என்னால் எதையும் உறுதிப்படுத்த முடியாது. 

இன்றைக்கு இந்த செய்தி வந்து, பொருட்படுத்தாமல் போயிருக்கும், வேறு யாராவது சொல்லியிருந்தால். பழ.நெடுமாறன் ஐயா இந்திரகாந்தி அள்ளிக் கொடுத்த பதவிகளை எல்லாம் உதறிவிட்டு கர்மயோகியாக வாழ்ந்தவர். 

பிரபாகரனின் ஆரம்ப காலத்தில் இருந்து, சொத்துக்களை இழந்து பிள்ளைகளை வளர்த்தவர் நெடுமாறன். அந்த வகையில் தமிழகத்தில் புலிகளை தீவிரமாக ஆதரித்தவர். அவருக்குள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்கிற உள்ளுணர்வு அல்லது விருப்பம் இருந்திருக்கிறது. அவருடன் பேசும் போது அதை உணர்ந்திருக்கிறேன். 

நெடுமாறன் ஐயா கூறியுள்ள தகவலை ஏற்பவர்களும் சரி, சீமான் போல மறுப்பவர்களும் சரி, நெடுமாறன் ஐயா மீது பெருமதிப்பு கொண்டவர்கள் தான். இலங்கை தரப்பில், பிரபாகரன் இல்லை என்றும், அது தொடர்பான ஆதாரம் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர், ‘உரிய தகவலை பெற்று பதில் சொல்கிறோம்’ என்று கூறியிருப்பது தான் இதில் ஆச்சரியமான விசயம். 

இதுவரை பிரபாகரன் இறந்ததற்கான ஆதாரங்களை இலங்கை ராணுவம் வெளியிடவில்லை. அது கொஞ்சம் மர்மமாக தான் உள்ளது. பிரபாகரன் உடல் கிடைத்ததாக கூறப்பட்டது. என் நண்பர்கள் பலரும் அது பிரபாகரன் உடல் இல்லை என்கிற கருத்தை தான் கொண்டிருந்தார்கள். 

இறுதிப் போரில் பிரபாகரன் நடுக்கடலில் அலையாத்தி காடுகளில் இருந்து போராடிக்கொண்டிருந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது. அது தான் பிரபாகரனின் இறுதி கட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல். சிலர் பிரபாகரன் இல்லை என்று அழுத்து சொல்கிறார்கள், அதற்கும் ஆதாரம் இல்லை. இருக்கிறார் என்பதற்கும் ஆதாரம் இல்லை. 

நெடுமாறன் ஐயா கூறுவதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்போது இருப்பவர்களில் சிவாஜி லிங்கத்திற்கு தான் அதிக தகவல் தெரிந்திருக்கும். அவரும் ‘பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’ என்று தான் கருத்து தெரிவித்திருக்கிறார்.  

மரணத்தை தவிர்த்து தொடர்ந்து போராடுபவன் தான் வீரன். தற்கொலை போல வந்து போவது, மகன் இறந்துவிட்டான் நான் உயிர் தப்பக்கூடாது என்று நினைப்பதும் வீரம் அல்ல. உலகத்தில் போராட்டம் தோற்றால் சாக வேண்டும் என்றும் தலைவன் நினைத்திருந்தால் உலகத்தில் எந்த மாற்றமும் வெற்றியும் வந்திருக்காது. இது வெற்றி பெற்ற எல்லா தலைவர்கள் வாழ்க்கையிலுமு் நடந்திருக்கிறது. 

எனவே பிரபாகரன் தப்பியிருக்க மாட்டார் என்று அதற்கு இவர்கள் கூறும் சில கருத்தை மாவீரனுக்கு இலக்கணம் என்று கூறுவதை என்னால் ஏற்க முடியாது,’’

என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.