IIT Chennai Certificate Course : சென்னை ஐ.ஐ.டி.யில் வழங்கப்படும் புதிய 5 சான்றிதழ் படிப்புகள் என்ன? – விவரங்கள் உள்ளே
IIT Chennai Certificate Courses : மின் வாகன பொறியியல், குவாண்டம் கம்ப்யூட்டிங், சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பம், கட்டுமான தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில், இந்த பயிற்சியை வழங்க உள்ளது.
இந்திய தொழில்நுட்ப நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி., நவீன தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை டிஜிட்டல் கல்வி வழியாக வழங்கி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தொழில்முறை ஊழியர்களுக்கான நிர்வாகக் கல்வி பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
மின் வாகன பொறியியல், குவாண்டம் கம்ப்யூட்டிங், சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பம், கட்டுமான தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில், இந்த பயிற்சியை வழங்க உள்ளது.
இதுபோன்ற பயிற்சிகளை ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு நேரடி முறையில் வழங்குவதை ஐ.ஐ.டி. வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளவர்களை இந்த பயிற்சி திட்டத்தின் கீழ் உள்ளடக்கும் விதமாக, தற்போது ஆன்லைன் வாயிலாக பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.
ஏற்கனவே என்.பி.டி.இ.எல். மற்றும் ஐ.ஐ.டி.எம். பி.எஸ் பயிற்சிகள் (NPTEL and IITM BS programs) முதற்கட்டமாக ஆன்லைன் வாயிலாக வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த வெற்றியை தொடர்ந்து, தொழில்முறை நிபுணர்களுக்கு அவர்களது திறனை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், இந்த தொழில்நுட்ப பயிற்சியை அளிக்க, சென்னை ஐ.ஐ.டி. முன்வந்துள்ளது.
இதில் வாரந்தோறும் நேரலை கலந்துரையாடல், பேராசிரியர்களின் தனிக்கவனம், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தெரிந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெறும்.
எரிபொருள் வாகனங்களிலிருந்து மின்சார வாகனத்திற்கு மாறும் வாகன தொழில்துறைக்கு கவனம் செலுத்தப்படுகிறது.
ஏனெனில், இந்தத் துறையில் மாபெரும் வேலைவாய்ப்புகள் இருப்பதால், திறமை வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்படும் என்பதால், இது சார்ந்த பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மின்சார வாகன பொறியியல் துறை பயிற்சியில், மின்சார வாகனங்களில் தொழில்நுட்பம் சார்ந்த அடிப்படை விவரங்கள், முக்கிய அம்சமாக இடம்பெறும்.
ஏற்கனவே, முதலாவது கூட்டுப் பயிற்சி முகாம் நிறைவடைந்து, ஏப்ரல் 29ம் தேதி பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இரண்டாவது கூட்டுப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து 3வது கூட்டுப் பயிற்சிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் இந்த பயிற்சியில் பங்குபெற்று பலன்பெற விரும்புவோர், support-elearn@nptel.iitm.ac.in என்ற இணைய தள முகவரியை பார்வையிடலாம்.
ஐந்து சான்றிதழ் பயிற்சி முகாம் ஜூலை 1ம் தேதி முதல் துவங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 20ம் தேதி கடைசி தேதியாகும்.
டாபிக்ஸ்