TN CM: 'வெள்ளப் பாதிப்புகளுக்கு ரூ.37ஆயிரம் கோடி கேட்டோம்; ஒரு பைசா கூட வரவில்லை' - சேலம் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Cm: 'வெள்ளப் பாதிப்புகளுக்கு ரூ.37ஆயிரம் கோடி கேட்டோம்; ஒரு பைசா கூட வரவில்லை' - சேலம் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு

TN CM: 'வெள்ளப் பாதிப்புகளுக்கு ரூ.37ஆயிரம் கோடி கேட்டோம்; ஒரு பைசா கூட வரவில்லை' - சேலம் மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு

Marimuthu M HT Tamil
Jan 21, 2024 07:50 PM IST

வெள்ளப் பாதிப்புகளுக்கு ரூ.37ஆயிரம் கோடி கேட்டோம்; ஒரு பைசா கூட வரவில்லை என சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

வெள்ளப் பாதிப்புகளுக்கு ரூ.37ஆயிரம் கோடி கேட்டோம்; ஒரு பைசா கூட வரவில்லை - சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வர் பேச்சு
வெள்ளப் பாதிப்புகளுக்கு ரூ.37ஆயிரம் கோடி கேட்டோம்; ஒரு பைசா கூட வரவில்லை - சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வர் பேச்சு

சேலம் – பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி 2-ஆவது மாநில மாநாட்டில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அதில் முதலமைச்சர் பேசியதாவது,  ‘’கடல்போல் திரண்டிருக்கும் திராவிடப் பட்டாளமே! கொள்கை பிடிப்பும், இலட்சிய தாகமும் கொண்ட இலட்சக்கணக்கான தம்பிமார்களான உங்களை வீரபாண்டியார் மாவட்டமான சேலம் மாவட்டத்தில் ஒருசேரப் பார்க்கிறபோது, எனக்கு பெரிய உற்சாகமும், மகிழ்ச்சியும் - ஏன் புத்துணர்ச்சி பிறக்கிறது. தெற்கில் விடியல் பிறந்திருப்பதைப்போல விரைவில் இந்திய நாடு முழுவதும் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு இருபது வயது குறைந்தது போன்று புது தெம்பு வருகிறது. என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

திராவிட இயக்கம் தோன்றி நூறாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது; நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிவிட்டது! 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று சென்னை இராபின்சன் பூங்காவில் திரண்டிருந்த அதே கொள்கை உறுதியையும், லட்சிய வேட்கையையும் இன்றைக்கு லட்சக்கணக்கான இளைஞர்களான உங்களிடம் பார்க்கிறபோது, இந்த இயக்கத்தின் தலைவராக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

இந்த உணர்வை – உற்சாகத்தை - எழுச்சியை - ஏற்படுத்தி தந்திருக்கும், இளைஞரணிச் செயலாளர் – மாண்புமிகு தம்பி உதயநிதி அவர்களைப் பாராட்டுகிறேன் – வாழ்த்துகிறேன்! “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்” என்று அய்யன் வள்ளுவர் சொன்னதுபோல, அவரின் செயல்கள் - கழகப் பணிகள் – மக்கள் தொண்டு அமைந்திருக்கிறது. 

எனக்கு முப்பது வயது இருக்கும்போது தலைவர் கலைஞரும், இனமானப் பேராசிரியரும் இளைஞரணியை உருவாக்கினார்கள்! கொள்கைப் படையாக இளைஞரணி செயல்பட்டு வருவதை, இந்த சேலம் மாநாடு, நாட்டுக்கே சொல்லிவிட்டது!

“எந்தக் கொம்பனாலும் கழகத்தை வீழ்த்த முடியாது” என்ற நம்பிக்கை ஊட்டும் மாநாடாக இந்த சேலம் இளைஞரணி மாநாடு அமைந்துவிட்டது! இவ்வாறு என்னை நெஞ்சை நிமிர்த்தி சொல்ல வைத்த இளைஞரணிச் செயலாளர் - மாநில துணைச் செயலாளர்கள் – மாவட்ட அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் என்று ஒட்டுமொத்த இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் - நன்றியும்!

அடுத்து முக்கியமாக, இந்த மாநாடு இவ்வளவு பிரமாண்டமாக நடைபெறக் காரணமானவர் – நம்முடைய முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு!. ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று, எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். அப்படிப்பட்ட நேரு அவர்களுக்கும், அவரோடு தோளோடு தோள்நின்று பணியாற்றிய அனைத்து நிர்வாகிகளுக்கும்  என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் - வாழ்த்துகள்!

1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞரணி தொடங்கப்பட்டது. அன்று முதல், நகரம் - கிராமம் எங்கும் கழகக் கொடியை ஏற்றுவதும் - பாசறைக் கூட்டங்கள் நடத்துவதும் என்று தமிழ்நாட்டையே நான் வலம் வந்தேன். மாநாடுகளில் நடத்தப்படும் பெரும் பேரணிகள் எல்லாம் எங்களின் வெண்சீருடை அணிவகுப்பால் பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்தது. 

1980-ஆம் ஆண்டு முதல் கட்சிக்குள்ள புது ரத்தம் பாய்ச்சியது, இளைஞரணி! உழைப்பு - உழைப்பு – உழைப்பு என்று தலைவர் கலைஞர் அவர்கள் என்னைப் பாராட்டினார்கள். அந்த உழைப்புக்கு இளைஞரணி தம்பிமார்கள் என்னை உற்சாகம் ஊட்டிக்கொண்டே இருப்பார்கள். இளைஞரணி தம்பிமார்களே! நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்பும் கொள்கை உணவு எது தெரியுமா?

பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட நம்முடைய தமிழினத்தின் வரலாற்றைத் தெரிந்துக் கொள்ளுங்கள். நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட திராவிட இயக்கத்தின் கொள்கையையும் - அதற்காக போராடிய தலைவர்களின் வரலாற்றையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் இந்த நவீன தமிழ்நாட்டை உருவாக்கிக் கொடுத்த சிற்பி நம்முடைய தமிழினத் தலைவர் கலைஞர் என்று உங்களுக்குப் புரியும்!

அதுமட்டுமல்ல, தமிழினத்திற்கு எதிரான நாசகார சக்திகள் இதுவரை எந்த வகையில் எல்லாம், நம்முடைய தமிழினத்தின் மொழியையும், பண்பாட்டையும் நாசம் செய்தது என்றும் உங்களுக்குப் புரியும்!

இப்போது மாநாடு நடத்திச் சொல்ல வேண்டியதை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிடும்போது, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்களை சென்று சேரும் அளவிற்கு நவீனத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நம்முடைய கொள்கைப் பரப்புரையைத் தொய்வில்லாமல் நீங்கள் செய்ய வேண்டும். 

சமூகநீதி – சமத்துவம் - சுயமரியாதை – சகோதரத்துவம் – மாநில உரிமைகள் – மொழிப்பற்று – இனப்பற்று – பெண்ணுரிமை – ஒடுக்கப்பட்டோர் நலன் – எல்லார்க்கும் எல்லாம் என்கிற அடித்தளத்தில் உருவாக்கப்பட்டதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். ஒரு சீர்திருத்த இயக்கத்தின் கையில் ஆட்சி நடத்தும் வாய்ப்பு வருமானால் என்னென்ன செய்ய முடியுமோ – அவை அத்தனையையும் செய்து காட்டியிருக்கிறோம்.

நாம் பெயர் சூட்டிய நம்முடைய தமிழ்நிலத்துக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. மொழியை அழித்து – தமிழ்ப் பண்பாட்டை அழித்து – மாநில மதிப்பை அழித்து – அதன் மூலமாக தமிழினத்தை அழித்து, நம்மை அடையாளமற்றவர்களாக ஆக்குவதற்குப் பாசிச பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டை எல்லா வகையிலும் பாழ்படுத்திய கட்சி, அ.தி.மு.க. அவர்கள் அழிவுவேலைகள் அனைத்தையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. இப்போது அவர்கள் ஆடும் ’உள்ளே-வெளியே’ ஆட்டம், பா.ஜ.க. போட்டுக் கொடுத்த நாடகம்! பழனிசாமியின் பகல் வேஷத்தை அ.தி.மு.க. தொண்டர்களே நம்பத் தயாராக இல்லை, அதுதான் உண்மை! 

மாநிலங்களுக்குப் போதுமான அதிகாரங்களை வழங்கிவிட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் பாதுகாப்பதற்கு எவ்வளவு அதிகாரங்கள் தேவையோ - அதை மட்டும் ஒன்றிய அரசு வைத்துக் கொண்டால் போதும்!

இதற்காகத்தான் தலைவர் கலைஞர் இராசமன்னார் குழுவை 1969-ஆம் ஆண்டு அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதித்து தீர்மானமாகவும் நிறைவேற்றினார். 'மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்பது கலைஞர் நமக்குக் கற்றுக் கொடுத்த முழக்கம்!

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அந்த முழக்கம் இந்தியாவின் முழக்கமாக மாற போகிறது! அமைய இருக்கும் இந்தியா கூட்டணி ஆட்சியானது – மாநில உரிமைகள் வழங்கும் சிறப்பான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் கவனம் செலுத்தும்!

தி.மு.க. அரசை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, மாநில அரசு உரிமைகள் என்று நான் சொல்லவில்லை! மாநிலங்களை ஆளும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் என்று எந்தக் கட்சியாக இருந்தாலும் – ஏன், பா.ஜ.க. ஆட்சி செய்கிற மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி வேண்டும் என்று, எல்லா மாநிலங்களுக்குமான உரிமையாகத்தான் கேட்கிறோம்! இதை இங்கு மட்டுமல்ல, அண்மையில் ஒன்றிய பிரதமர் திருச்சிக்கு வந்தபோது, அவரை மேடையில் வைத்துக்கொண்டே இதை சொன்னவன், இந்த ஸ்டாலின்.

இன்றைக்கு பிரதமராக இருக்கும் அவர், ஒருகாலத்தில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான். ஆனால், இன்றைக்கு மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியைத்தான் பிரதமராக வந்ததில் இருந்து மோடி அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்.

 எதற்கும் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைகளைக் கேட்பது இல்லை. புதிய கல்விக் கொள்கை, நீட், ஜி.எஸ்.டி என்று இவ்வாறு மாநிலங்களின் கல்வி – நிதி அதிகாரத்தை முற்றிலுமாக பறித்துவிட்டார்கள். ஒன்றிய அரசிற்குப் பணம் தரும் ATM-ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள்.

மிகப்பெரிய இயற்கைப் பேரிடர் காலத்தில்கூட நமக்காக உதவிகள் செய்வது இல்லை. சமீபத்தில் வந்த பேரிடருக்கு, 37 ஆயிரம் கோடி ரூபாய் பணம் கேட்டிருக்கிறோம். ஆனால், இதுவரைக்கும் ஒரு பைசா வரவில்லை. பிரதமர் வந்தார் - தருவேன் என்றார்; நிதி அமைச்சர் வந்தார் - தருவேன் என்றார்; பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்தார் – தருவேன் என்றார்; உள்துறை அமைச்சரை நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் எம்.பி.க்கள் பார்த்தபோது அவரும் தருவேன் என்றார். ஆனால் இப்போது வரைக்கும் எதுவும் வரவில்லை!

இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ‘சும்மா திருக்குறள் சொன்னால் போதும். பொங்கல் கொண்டாடினால் போதும். அயோத்தியில் கோயில் கட்டினால் போதும். தமிழ்நாட்டு மக்கள் ஓட்டுப் போடுவார்கள்’ என்று ஏமாற்ற நினைக்கிறார்கள். அவர்கள் நம்மை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. 

மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் இரண்டு முறை பிரதமர் ஆகியிருக்கிறார். இரண்டு முறையும் தமிழ்நாட்டு மக்கள் அவர் பிரதமராக வாக்களிக்கவில்லை. இந்த முறையும் நிச்சயம் வாக்களிக்கப்போவது இல்லை. இந்த முறை தமிழ்நாட்டைப் போலவே – இந்தியாவும் செயல்பட போகிறது.

நாம் உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணி அமைக்கும் ஆட்சி, ஒற்றைக்கட்சி ஆட்சியாக இருக்காது! சர்வாதிகார ஆட்சியாகவும் இருக்காது! கூட்டாட்சியாக இருக்கும்! 

தேர்தல் பணி தொடக்கமாக, சேலம் மாநாட்டுக்கு முன்பே மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவும் - தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி தலைமையில் ஒரு குழுவும் - தேர்தல் பணிகளை முழுமையாக கண்காணித்து ஒருங்கிணைக்க நேரு, வேலு, பாரதி, தங்கம் தென்னரசு, தம்பி உதயநிதி என ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஐவர் குழு 40 தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள நிர்வாகிகளை அழைத்து வெற்றிக்கான வியூகத்தைத் தருவார்கள். அறிக்கைத் தயாரிக்கும் குழு முக்கிய நகரங்களுக்கு வந்து மக்கள் கருத்துகளைக் கேட்பார்கள்.

கூட்டணியைப் பற்றியும் - யார் வேட்பாளர் என்பதையும் தலைமையின் கையில் விட்டுவிடுங்கள். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெற்றி பெறுபவரே வேட்பாளர் என்று முன்பே நான் சொல்லி இருக்கிறேன். யார் வெற்றி பெறுவார்களோ, அவர்கள்தான் வேட்பாளர். இது உறுதி!

வருகின்ற மூன்று மாத காலம் நீங்கள் உழைக்கும் உழைப்பில்தான் இந்தியாவின் அடுத்த ஐந்தாண்டு எதிர்காலம் அடங்கி இருக்கிறது. உங்கள் உழைப்பை முழுமையாக வழங்குங்கள்!

என் உயிரினும் மேலான இளைஞரணி தம்பிமார்களே… உதயநிதி மட்டுமல்ல, நீங்கள் அனைவருமே எனது மகன்கள்தான். உங்கள் ஒவ்வொருவரையும் எனது மகனாக – கழகத்தின் கொள்கை வாரிசுகளாகத்தான் பார்க்கிறேன். சேலத்தில் சூளுரைப்போம்! சேர்ந்து எழுவோம்! இந்தியா கூட்டணி வெல்லட்டும்’ என முதலமைச்சர் நீண்ட நெடிய உரையை முடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.