Palar River: ’பாலாற்றில் அணைகட்டுவதா?’ ஆந்திர அரசுக்கு துரைமுருகன் எச்சரிக்கை!
”முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாச்சிக்கு எதிரானது”

பாலாற்றில் அணைகட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 – ஆம் ஆண்டைய மதராஸ் – மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.
1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.