Vilathikulam Bus Stand: 'பைக்' ஸ்டாண்டாக மாறி வரும் பஸ் ஸ்டாண்ட்!
தூத்துக்குடி: வெளியூர் செல்லும் பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்களை விளாத்திகுளம் பேருந்து நிலையத்தின் உட்புறம் ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்வதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சியில், 15 வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அதிகளவில் உள்ளன. ஏராளமான வணிக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட், தனியார் மற்றும் அரசு வங்கிகள் விளாத்திகுளத்தில் செயல்பட்டு வருகிறது.
விளாத்திகுளத்திகுளம் பகுதியை சுற்றி 50-க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் தூத்துக்குடி, கோவில்பட்டி, அருப்புக்கோட்டை ஆகிய நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் விளாத்திகுளம் பேருந்து நிலையம் வந்து பஸ் பிடித்து செல்ல வேண்டும்.
இங்கிருந்து சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவில்பட்டி, திருச்செந்தூர், அருப்புக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றது. பல்வேறு கிராமங்களில் இருந்து தினந்தோறும் வரும் மக்கள் தங்களின் அத்தியாவசியப் பொருட்களை விளாத்திகுளத்தில் வாங்கிச் செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் எப்போதும் பயணிகள் மற்றும் பொது மக்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் விளாத்திகுளத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்களை இந்த பேருந்து நிலையத்தின் உட்புறம் ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
இதேபோல், பஜார் பகுதியில் உள்ள மதுரை ரோடு பகுதிகளிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும், பேருந்துகள் பஸ் நிலையத்தின் உள்ளே வந்து திரும்பி செல்ல முடியாமல் அரசு பேருந்து டிரைவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
பேருந்து நிலையத்தின் உட்புறம் செயல்பட்டு வரும் பைக் ஸ்டாண்ட்டில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் பேரூராட்சி நிர்வாகத்துக்கும் வருமானம் கிடைக்கும், பயணிகளும், பொதுமக்களும் சிரமப்படமாட்டார்கள் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், பேருந்து ஓட்டுனர்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.