E-waste burning: மின்கழிவுகளை எரித்தால் 5 ஆண்டுகள் சிறை - ஆட்சியர் எச்சரிக்கை
மின்கழிவுகளை எரித்தல் போன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் குறைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மின் கழிவுகளை எரித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது 5 ஆண்டுகள் சிறை தண்டனை போன்ற கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விழுப்பரம் ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மின்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ், பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்து எடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவு புதுப்பிப்பாளர்கள் மட்டுமே மின்கழிவுகளை சேகரித்து செயலாக்க முடியும்.
ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள் மின் கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள், அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும்.
மின்னணு கழிவு மேலாண்மை விதிகளின்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கைவிடப்பட்ட மின்கழிவு பொருள்களை சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர்கள் அல்லது மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவருக்கு அனுப்ப வேண்டும்.
முறைசாரா வர்த்தகம், அறிவியல் பூர்வமற்ற செயலாக்கம், மின் கழிவுகளை எரித்தல் போன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் குறைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின்கழிவுகளை அறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல், எரித்தல் ஆகியவை மனித ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
மின்னணு கழிவு மேலாண்மை விதிகளின்படி இந்த விதிகள் மீறப்பட்டால் மின்பொருள் உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின்கழிவு இடமாற்றம் செய்வோர், பிரித்தெடுபோர் மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்ப்பட்டுள்ளது.