Vandalur Zoo: வண்டலூர் பூங்காவில் பார்கிங்க் கட்டணம் கட்! நுழைவு கட்டணம் ஹைக்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vandalur Zoo: வண்டலூர் பூங்காவில் பார்கிங்க் கட்டணம் கட்! நுழைவு கட்டணம் ஹைக்!

Vandalur Zoo: வண்டலூர் பூங்காவில் பார்கிங்க் கட்டணம் கட்! நுழைவு கட்டணம் ஹைக்!

Kathiravan V HT Tamil
Sep 04, 2023 07:53 PM IST

”வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் நுழைவுக் கட்டணம் கடைசியாக 2020 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது”

வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்கா

தற்போது, ​​பூங்காவில் 170 வகைகளை சேர்ந்த 1977 வன விலங்குகள் உள்ளன. மேற்படி பூங்கா, உயிரியல் பூங்காக்கள் மற்றும் மீன்வளங்களுக்கான உலக சங்கம் (World Association for Zoos and Aquariums) போன்ற முன்னணி நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுடன் இணைந்து தனது கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவை விரிவுபடுத்தியுள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள அரிய மற்றும் அழிந்து வரும் உயிரினங்களை குறிப்பாக வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த பூங்கா செயல்படுகிறது. இந்த பூங்கா மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் சிறந்த உயிரியல் பூங்காவாக  அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.  

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர் (பெரிய உயிரியல் பூங்கா வகை), கிண்டி சிறுவர் பூங்கா (நடுத்தர வகை உயிரியல் பூங்கா), குரும்பபட்டி உயிரியல் பூங்கா, சேலம் (சிறிய வகை உயிரியல் பூங்கா) மற்றும் அமிர்தி உயிரியல் பூங்கா, வேலூர் (சிறிய வகை உயிரியல் பூங்கா) ஆகிய நான்கு உயிரியல் பூங்காக்கள், தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட நான்கு உயிரியல் பூங்காக்களும் பார்வையாளர்களிடமிருந்து பெறப்படும் நுழைவுக் கட்டண வருவாயின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. உணவு, ஊதியம், அத்தியாவசிய மற்றும் கட்டாய பராமரிப்பு மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்கான செலவினங்களைச் சமாளிக்க வருவாய் பயன்படுத்தப்படுகிறது. 

உயிரியல் பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கும் இந்த உயிரியல் பூங்காக்களின் நுழைவுக் கட்டணம் மாற்றியமைக்கப்படுகின்றன. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் நுழைவுக் கட்டணம் கடைசியாக 2020 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. 

உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகள், பறவைகள் போன்றவற்றை பராமரிப்பதற்கும், பார்வையாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும் பார்வையாளர் நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைப்பது இன்றியமையாததாகிவிட்டது. அதன்படி, 16.11.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 21-வது ஆட்சிக் குழுக் கூட்டத்தில் ஒரு முன்மொழிவு வைக்கப்பட்டது. நான்கு உயிரியல் பூங்காக்களின் நுழைவுக் கட்டணத்தை திருத்தியமைப்பதற்கான முன்மொழிவுக்கு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருத்திய நுழைவு கட்டண அமைப்பில் உள்ள சிறப்பம்சங்கள் பின்வருமாறு

  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தற்போது இலவச நுழைவு கட்டணம் தொடர்கிறது
  • 5- 12 மற்றும் 13-17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக ரூ 20/- மட்டும் வசூலிக்கப்படும்.
  • இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் ஏற்கெனவே உள்ள இருவேறு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு ஒரே மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
  • தற்போதுள்ள சக்கர நாற்காலிக்கான கட்டணம் ருபாய் 25 ரத்து செய்யப்படுகிறது.
  • சைக்கிள் மற்றும் ரிக்சாவுக்கு  நிறுத்துமிடக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  •  டைம்-ஸ்லாட் நிறுத்துமிடக் கட்டணம் முறை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
  • இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வேன், டெம்போ பயணிகள், மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்தக் கட்டணம் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவுக் கட்டணம் ரூபாய் 115 லிருந்து  ரூபாய் 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனக் கட்டணம் ரூபாய் 100 லிருந்து  ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • சஃபாரி   வாகனக் கட்டணம் ரூபாய் 50 லிருந்து ரூபாய் 150 ஆக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • வீடியோ ஒலிப்பதிவு (Video camera) கட்டணம் ரூபாய் 500 லிருந்து            ரூபாய் 750 ஆக  நிர்ணயம் செய்யப்படுகிறது.

மேற்கண்ட உயிரியல் பூங்காக்களில் நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைப்பதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காக்களின் வருவாய் அதிகரிக்கும். இந்த வருவாய் அதிகரிப்பின் மூலம் உயிரியல் பூங்காக்களுக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவும், உயிரியல் பூங்காக்களில் உள்ள மேலும் விலங்குகளை சிறப்பாக பராமரிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.