HT Special: பல 100 ஆண்டுகளாக உயிர்ப்போடு வாழ்ந்துக்கிட்டு இருக்கும் தஞ்சாவூர் வீணை!
Thanjavur Veenai: பல நூறு ஆண்டுகளாக உயிர்ப்போடு வாழ்ந்துக்கிட்டு இருக்கும் தஞ்சாவூர் வீணை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
இசையுலகின் அரசி வீணை. சரஸ்வதி கையில் வீணை உள்ளது. பல மாநிலங்களில் வீணை உருவாக்கப்பட்டாலும் தஞ்சாவூரில் தயாராகும் வீணை தனித்தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. எனவே தான் தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது. தஞ்சாவூர் வீணையில் இருந்து வெளிவரும் இசையின் ரகசியம் என்ன என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்களை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
தமிழகத்தின் கலாச்சார அடையாளம் தஞ்சாவூர். பரதம், இசை, கரகாட்டம், தெருக்கூத்து, ஓவியம், சிற்பம் என சகல கலைகளுக்கும் தலைமையகமாக இன்றும் விளங்குகிறது. கலைநயம் மிக்க தஞ்சாவூரில் உருவாக்கப்படும் வீணை தனித்தன்மையுடன் விளங்கும். பழங்காலத்தில் இதன் தோற்றமும், அமைப்பும் பல வகைகளில் இருந்துள்ளது. மீன், மயில், படகு போன்ற வெவ்வேறு வடிவங்களில் கூட வீணை செய்யப்பட்டுள்ளது. இது ருத்ர வீணை என அழைக்கப்படும்.
திருவனந்தபுரம் வீணை, மைசூரு வீணை போலும் பிற வீணைகளும் உள்ளன. அப்போது வழக்கில் இருந்த சரஸ்வதி வீணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுத் தஞ்சாவூர் வீணை உருவாயிற்று. 17-ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னர் ரகுநாத நாயக்கர் காலத்தில் (1600- 1645) அவரது பிரதான அமைச்சராயிருந்த கோவிந்த தீட்சிதர் உதவியுடன் இது நிகழ்ந்தது. அப்போது ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு வீணையாக இருந்தது. பிறகு ரகுநாத நாயக்கர் காலத்தில் அனைத்து ராகத்தையும் ஒருங்கே கொண்ட வீணை உருவாக்கப்பட்டது. இதை சரஸ்வதி வீணை அல்லது ரகுநாத வீணை எனவும் கூறுவதுண்டு.
தஞ்சாவூர் வீணையில ஏகாந்த வீணை, ஒட்டு வீணை என இரண்டு விதமான வகைகள் உண்டு. ஏகாந்த வீணை ஒரே மரத்தில் செய்யப்பட்டது. அதில் மரத்துண்டுகளே இருக்காது. இதில் குடம், தண்டி, யாளித்தலை என மூன்று பகுதிகள் இருக்கும். மூன்று மரத்துண்டுகளால் தனித்தனியாகச் செய்து ஒன்றாகப் பொருத்துவது ஒட்டு வீணை எனப்படுகிறது.
தஞ்சாவூர் வீணைகள் எல்லாமே முழுக்க முழுக்க பலா மரத்தால் தான் செய்யப்பட்டிருக்கும். ஏனெனில் பலா மரத்தில் பால் சத்து அதிகம் இருப்பதால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த வீணையானது வலுவாக இருக்கும். தஞ்சாவூர் வீணையின் எடை 7 கிலோ முதல் 8 கிலோ வரைதான் இருக்கும். எடை குறைவான வீணை என்பதே இதன் தனிச் சிறப்பு. இதோட மொத்த நீளம் 52 அங்குலம், பானையோட அகலம் 15 அங்குலம், உயரம் 12 அங்குலம்.
நல்லநேரம் பார்த்து, காமாட்சி அம்மனை வழிப்பட்டு தான் இப்பணியை தொடங்குவர். ஒரு வீணை செய்து முடிக்க 30 நாட்கள் ஆகும். மூன்று தந்திகள் சுருதி, தாளம் கருதியவை. நான்கு தந்திகள் வாசிக்க, தண்டி ஒரு பக்கத்தில் குடத்தையும் மறுபக்கத்தில் யாளித் தலையையும் இணைத்து நிற்கும். யாளி முகத்தின் அருகிலிருக்கும் சுரைக்காய் தாங்கியாகவும், ஒலி பெருக்கியாகவும் பயன்படும்.
குடத்தின் வெளிப்புறம் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். பல வகை ஒலித்துளைகள் போடப்பட்டிருக்கும். வண்ணம் தீட்டுவதில்லை, நாளாக நாளாக அதில் மெருகேறும். எடை குறையும், சுரஸ்தானம் அமைத்தலே மிக முக்கியமான பணி, நுட்பமான பணி. இசை உணர்வு உள்ளவரே இதை நுட்பமாகச் செய்ய முடியும். இசை நேர்த்தியாக வெளிப்பட வேண்டும் என்பதற்காக இதை உருவாக்குதே ஒரு தவம் தான். ஆனால், பெங்களூரூ போன்ற பகுதிகளில் பானைக்கு பதில் பைபர் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
தஞ்சை வீணை வகைகளை பொறுத்தவரையில் சரஸ்வதி வீணை, ஒட்டு வீணை, மதுரா வீணை, யாகாண்டார் வீணை, யாழி வீணை என பல வகையான வீணைகள் இங்கு உருவாக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் வீணைகள் பிற மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும் பயணம் செய்கிறது.
பல மாநிலங்களில் வீணை உருவாக்கப்பட்டாலும் தஞ்சாவூரில் தயாராகும் வீணை தனித்தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. எனவே தான் தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது.