Udhayanidhi Stalin: சட்டமன்றத்தில் அமைச்சராக உதயநிதியின் முதல் பேச்சு இது தான்!
Udhayanidhi Stalin Speech in Tamilnadu Assembly: விளையாட்டுத்துறை அமைச்சரான பின்னர் சட்டமன்றத்தில் முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார்.
தமிழக சட்டமன்றத்தின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை வரும் 13ஆம் தேதி வரை நடத்துவது என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் மறைந்த தமிழறிஞர்கள், ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே, நேற்று சட்டமன்றத்துக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்த நிலையில், இன்று வழக்கமான வெள்ளை உடையில் வருகை தந்திருந்தனர். இன்றைய கூட்டத்தொடர் கேள்வி நேரத்துடன் காலை 10 மணிக்கு தொடங்கியது. இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறையின் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இன்று காலை சட்டமன்றம் கூடியவுடன், திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, "திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ. 18 கோடி மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில், பார்வையாளர்கள் அமரும் வகையிலான திறந்தவெளி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னீஸ், கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான ஆடுகள வசதிகள் உருவாக்கப்படும்.
அதேபோல், திறந்தவெளி மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறையால் நவம்பர் 2021 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது 60 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது. 1500 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய பார்வையாளர் மாடம் பணிகள் முடிக்கப்பட்டு, 400 மீட்டர் தடகள பாதை, கால்பந்து மைதானம் மற்றும் கைப்பந்து ஆடுகளப் பணிகள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்து ஏப்ரலில் திறக்கப்படும். " என்று தெரிவித்தார்.
மேலும், உலகக் கோப்பை கபடி போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, "உலகக் கோப்பை கபடி போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளை உள்ளடக்கிய ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டிகளுக்கான ஆயத்தப்பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்” என்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டமன்றத்தில் பதிலளிக்க எழுந்தபோது திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். விளையாட்டுத்துறை அமைச்சரான பின்னர் சட்டப்பேரவையில் முதன்முறையாக உதயநிதி கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்