TN Police: பாஜகவில் சோ்ந்த காவல் அதிகாாிகள் சஸ்பெண்ட் - தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு!
காவல்துறை சீருடை அணிந்து பாஜகவில் இணைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
நாகையில் காவல்துறை சீருடை அணிந்தபடி பாஜகவில் சோ்ந்த இரண்டு உதவி ஆய்வாளர்களை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளாா்.
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற மக்கள் சந்திப்பு நடைப்பயணத்தை நடத்தி வருகிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அண்ணாமலை மேற்கொள்ளும் இந்தப் பயணம், தமிழர்களின் எழுச்சிக்காகவும், ஊழலை அறவே ஒழிக்க வேண்டுமென்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது என தமிழக பாஜக தலைமை அறிவித்திருந்தது.
அந்தவகையில் வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் விதமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் மக்களை சந்திக்கும் வகையில் இந்த நடைபயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கடந்த 27ஆம் தேதி நாகை மாவட்டத்தில் 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தை மேற்கொண்டாா். இதன் ஒரு பகுதியாக நாகை வெளிப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொண்டா்கள், பொதுமக்கள் மத்தியில் அவா் உரையாற்றினாா். இதனிடையே, கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடம் அருகே பாஜக உறுப்பினா் சேர்க்கைக்கான முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த காவல்துறை சீருடை அணிந்திருந்த இரண்டு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாஜகவில் உறுப்பினராவதற்கான மிஸ்டுகால் கொடுத்துள்ளனா். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.
இதையடுத்து சீருடையில் இருந்தவாறு பாஜகவில் இணைந்ததால் வெளிப்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோா் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முன்னதாக, ராஜேந்திரன், கார்த்திகேயன் ஆகியோரை நாகை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது தஞ்சை சரக டிஐஜி உத்தரவின்பேரில் சிறப்பு உதவி ஆய்வாளாளா்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனா். தமிழக காவல்துறை சீருடை அணிந்தபடி பாஜகவில் சோ்ந்த இரண்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9