PM Modi Visit Chennai: பிரதமர் வருகை ..சென்னையில் போக்குவரத்துக்கு மாற்றம் என்ன? - முழு விபரம்!
பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் இன்று (மார்ச் 04) போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தருகிறார். இன்று மாலை 5 மணியளவில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் சென்னை வருகையின் போது பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதற்கு ஏற்றாற்போல் பயணத்தை திட்டமிட சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக பாஜக சார்பில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (4ம் தேதி) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் (மாலை 5 மணி) பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமரின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ, நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப்பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் இடத்தை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.விபட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிற்பகல் 12 முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள், மத்தியகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை, இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு, மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை, அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு, விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி), அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை, தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை ஆகிய சாலைகள் தடை செய்யப்படும். எனவே வாகன ஓட்டுகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மகாராஷ்டிராவில் இருந்து இன்று மதியம் 1.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் சென்றடைகிறார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர், கல்பாக்கத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். இதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு மாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் சென்றடைகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி இன்று இரவு சென்னையில் இருந்து தெலங்கானாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9