பல் பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி
பல்வீர் சிங் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை துவங்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறைக்கு இவர் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரை மிக கொடூரமாக தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதேபோல் 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவரை, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை உடைத்து பிரச்சனை செய்ததாக போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரது பற்களை ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கி எடுத்தாக புகார் எழுந்தது. ஏஎஸ்பி பல்பீர் சிங் சூர்யாவை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, அவரது பற்களை பிடுங்கி எடுத்துவிட்டார். வலியால் தான் அலறி துடித்ததாக சூர்யா குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னைபோலவே, 40 பேருக்கு மேல், பற்களை பிடுங்கிவிட்டதாக, பல்பீர் சிங் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், இடுக்கியை பயன்படுத்தியே, பற்களை பிடுங்கி எடுத்ததாகவும், இதனால், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 3 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இளைஞர்களின் பற்களை உடைத்ததுடன், அவர்களது வாயில் ஜல்லி கற்களை போட்டு கொடுமைப்படுத்தியதாகவும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்து, விசாரணையை முடித்த சி.பி.சி.ஐ.டி போலீசார், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் இருந்தனர். அதேசமயம் பல்வீர் சிங், ஐபிஎஸ் அதிகாரி என்பதால், அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசு மற்றும் யு.பி.எஸ்.சி. தேர்வாணையத்துக்குசி.பி.சி.ஐ.டி. போலீசார் கடிதம் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், பல்வீர் சிங் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணையை துவங்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்