TNPSC group 1 exam: குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி
2023ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் குரூப் 1 தேர்வு குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அதன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதேபோல் குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட ஆண்டு அட்டவணையில் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதையடுத்து தற்போது குரூப் 1 தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ் தேர்வுகளில் முக்கிய தேர்வுகளான குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி 2023 நவம்பரில் குரூப் 1 முதல்நிலை தேர்வும், 2024 ஜூலை மாதத்தில் முதன்மை தேர்வும் நடைபெறவுள்ளது.
2023 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான திட்டத்துடன் கூடிய கால அட்டவணை கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அந்த தேர்வு அட்டவணையில் குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை.
அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், 2024இல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து.
இது தேர்வை எதிர்நோக்கி இருந்த தேர்வர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உண்டாக்கியது. அத்துடன் இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து 2023ஆம் ஆண்டுக்கான அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட தேர்வு திட்ட அட்டவணையை (TNPSC Updated Annual Planner) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இந்த அப்டேட் செய்யப்பட்ட அட்டவணையில் குரூப் 1 தேர்வுக்கான விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி குரூப் 1 தேர்வக்கான முதல்நிலைத் தேர்வு 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், முதன்மைத் தேர்வு 2024 ஜுலை 24ம் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த குரூப் 1 பதவிகளுக்கான முழு அறிவிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், தற்போது காலி பணியிடங்கள் குறித்த விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படாமலும் உள்ளது.
அதேபோல் திருத்தப்பட்ட திட்ட அட்டவணையிலும் குரூப் 2 மற்றும் 2A குறித்த அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
டாபிக்ஸ்