Nellai Rains: கொட்டித் தீர்த்த பெருமழை..நெல்லையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி!
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது.
வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
நெல்லை, பாளையங்கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளையும் அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நெல்லை மாவட்டத்தில் அதிக கன மழை பெய்து வருவதைத் தொடர்ந்து, அங்கு நடைபெறுகிற மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசு தரப்பில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அப்பணிகளை ஆய்வு செய்வதற்காக நெல்லை வருகை தந்துள்ளோம்.
நெல்லை பாளையங்கோட்டையில் வெள்ளம் ஏற்பட்ட சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள பெல் உயர் நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி, இப்பேரிடர் நேரத்தில் துணை நிற்போம் என்று எடுத்துக்கூறினோம்." என்று கூறியுள்ளார்.
முன்னதாக, விருதுநகர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழகஅரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “ட்விட்டர்”- மூலம் தெரிவிக்கலாம் எனவும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், கனமழையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தேவைப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ உதவிகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளத்தின் (Social Media) மூலம் தமிழக அரசின் 8148539914 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், http://twitter.com/tn_rescuerelief (Username - @tn_rescuerelief) ட்விட்டர் பக்கத்திலும் பதிவுகளை தெரிவிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்