TN Medical Counselling : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பு - சிறப்புப் பிரிவுக்கு இன்று நேரடி கலந்தாய்வு
TN Medical Counselling : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இணையவழி பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி தொடங்கியது. சிறப்புப் பிரிவு, 7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர் ஒதுக்கீட்டு இடங்களுக்கு நேரடி கலந்தாய்வு இன்று (ஜூலை 27ம் தேதி) நடைபெறுகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,856 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,179 பேரும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 2,993 பேரும் இடம்பெற்றிருந்தனர்.
அவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு முதல் கட்டமாக இணைய வழியே தொடங்கியுள்ளது. அந்த கலந்தாய்வு குறித்த வழிகாட்டுதல் வீடியோ பதிவு மக்கள் நல்வாழ்வுத் துறை இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்புப் பிரிவு - மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 27ம் தேதி) சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறவுள்ளது.