Thiruvalluvar Day 2023: திருவள்ளுவர் தினம் - ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thiruvalluvar Day 2023: திருவள்ளுவர் தினம் - ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

Thiruvalluvar Day 2023: திருவள்ளுவர் தினம் - ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

Karthikeyan S HT Tamil
Jan 16, 2023 12:38 PM IST

சென்னை, மெரினா கடற்கரை சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மரியாதை செலுத்தினார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். (RAJ BHAVAN, Twitter)

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.

மேலும் இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள்," என்று குறிப்பிட்டு உள்ளார்.

திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை, மெரினா கடற்கரை சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மரியாதை செலுத்தினார். சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில்,"ஆளுநர் ரவி அவர்கள், பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் இருப்பவரும், தமிழர்கள் வாழும் புண்ணிய பூமியில் பிறந்தவரும் தர்மம், நீதி சாஸ்திரங்களை ஒருங்கே பெற்ற தனிச்சிறப்பு மிக்க திருக்குறளை வழங்கியவருமான திருவள்ளுவருக்கு அவரது தினத்தில் நெஞ்சார்ந்த மலர் மரியாதையை செலுத்தினார்.

#திருக்குறள் பாரதிய கலாசாரத்தையும் நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது. அதன் ஆழமான போதனைகள், இன்று #G20 தலைவராக எழுச்சி பெறும் பாரதத்துக்கு மிகவும் பொருத்தமானவை." என்று பதிவிடப்பட்டிருக்கிறது.

முன்னதாக, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்," திருவள்ளுவர் நாளில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் இரணியன் நா.கு. பொன்னுசாமிக்கு அய்யன் திருவள்ளுவர் விருதையும், கவிஞர் கலி. பூங்குன்றனுக்கு தந்தை பெரியார் விருதையும், எஸ்.வி. ராஜதுரைக்கு அண்ணல் அம்பேத்கர் விருதையும், நாமக்கல் வேல்சாமிக்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதையும், கவிஞர் மு. மேத்தாவிற்கு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதையும், முனைவர் இரா. மதிவாணனுக்கு தேவநேயப் பாவாணர் விருதையும் வழங்கி வாழ்த்தியதோடு, வள்ளலார் பல்லுயிர்க் காப்பகங்களுக்கான நிதி உதவியையும் அளித்தேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவ வழிநின்று சமத்துவச் சமுதாயம் காண உழைப்போம்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Whats_app_banner

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.