CM MK Stalin: ‘எனது மனைவி துர்கா கோயிலுக்கு செல்வது ஏன்?’- முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm Mk Stalin: ‘எனது மனைவி துர்கா கோயிலுக்கு செல்வது ஏன்?’- முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்

CM MK Stalin: ‘எனது மனைவி துர்கா கோயிலுக்கு செல்வது ஏன்?’- முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்

Karthikeyan S HT Tamil
Oct 21, 2023 03:58 PM IST

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்துக்கு அல்ல என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதைத் தொடர்ந்து பேசிய அவர், "திராவிட இயக்கம் என்பது தமிழினத்தைத் தலைநிமிர வைக்க - பிறந்த இயக்கம். யார் தலையையும் எடுக்கப் பிறந்த இயக்கமல்ல.. சீவுவேன்… சீவுவேன் என்று சொல்கிறார்களே இப்போது…சமூக வலைத்தளங்களில் நம் நோக்கத்தை நாம் முறையாகப் பயன்படுத்துவோம். அந்த வாய்ப்பை நேரான வழியில் பயன்படுத்துவோம். சமூக வலைத்தளங்கள் ஒருவரை ஒரே நாளில் புகழின் உச்சிக்குக் கொண்டு செல்லும். ஒருவர் பல காலம் கட்டமைத்த பிம்பத்தை சில நொடிகளில் உடைத்துவிடும். என்னைப் பொறுத்தவரை நெகட்டிவ் பிரச்சாரத்தின் மூலம் எதிரியை வீழ்த்துவதை விட, பாசிட்டிவ் பிரச்சாரத்தின் மூலம் நம்மை வளர்த்துக்கொள்வதுதான் சரியானது.

இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என நினைத்தவர்களின் எண்ணம்தான் அழிந்துவிட்டது. திமுகவை கற்பனையில் கூட அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை ஒழிப்பதைத் தவிர வேறு வேலையில்லை எனக் கூறியவர்கள், இறுதியில் இங்குதான் வந்து அடைக்கலம் அடைந்தார்கள்.

நாம் இன்று பாஜக, அதிமுக போன்றவர்களுடன் மோதிக் கொண்டிருக்கிறோம். சாதி, மதத்தின் பெயரால் பிளவுபடுத்தி நாட்டை நாசம் செய்ய நினைக்ககூடிய ஒரு கூட்டத்துக்கு எதிராக மோதிக் கொண்டிருக்கிறோம். பாஜகவின் சாதித்தன்மை தமிழ்நாட்டுக்கு மட்டும் எதிரானது அல்ல. நமது இந்தியாவுக்கே எதிரானது, ஒட்டுமொத்த மனித குலத்துக்கு எதிரானது.

இப்படிப்பட்ட பாசிச வாசிகள் ஒருபக்கம். இவர்களின் பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த அதிமுக மறுபக்கம். கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய கூட்டம்தான் அதிமுக. பாஜகவுடன் இருந்தால் தமிழக மக்களால் புறக்கணிக்கப்படும் என்று பயந்து உள்ளே வெளியே ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டை அழிக்க நினைக்கின்ற பாஜகவும், அண்ணா பெயரால் கட்சி நடத்தி, அதை பாஜகவிடம் அடகு வைத்த அதிமுகவும் வேறு வேறு அல்ல. நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள்.

அவர்களுக்கு இப்போது ஒரே வேலைதான்.. துர்கா ஸ்டாலின் எந்தக் கோயிலுக்குப் போகிறார் என்று பார்க்கிறார்கள். அந்த போட்டோவை எடுத்துப் போட்டு, ”பாத்தீர்களா, கோயிலுக்குச் செல்கிறார்”- எனப் பரப்புகிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாக் கோயிலுக்கும்தான் துர்கா செல்கிறார். அது அவரது விருப்பம். அதை நான் தடுக்கவில்லை. நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர - ஆன்மீகத்துக்கு எதிரிகள் அல்ல. கோயிலும் – பக்தியும் அவரவர் உரிமை – விருப்பம்! ஏராளமான கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி வெகு மக்களுடைய வழிபாட்டு உரிமையை வாங்கிக் கொடுத்தது திராவிட இயக்கம்தான். தலைவர் கலைஞரின் பராசக்தி வசனம்தான் அவர்களுக்குப் பதில்: ”கோயில் கூடாது என்றல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது”

கோயிலையும் பக்தியையும் பா.ஜ.க. தன்னுடைய அரசியலுக்கு சாதகமாக மாற்ற நினைக்கிறது. ஆன்மீகத்தையும் – அரசியலையும் மிகச்சரியாக பகுத்துப் பார்க்கத் தெரிந்த பகுத்தறிவுவாதிகள்தான் தமிழ்நாட்டு மக்கள். ”இந்த கோயில இடிச்சிட்டாங்க அந்தக் கோயில இடிச்சிட்டாங்க”- என வாட்ஸ்அப்பில் பூகம்பப் படங்களைப் போட்டு வதந்தி பரப்புகிறார்கள். 

ஆனால், உண்மை என்ன? 1000 கோயில்களுக்குக் குடமுழுக்கு விழா நடத்திய ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்ட ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. யார் யாரிடம் இருந்து, எங்கே எங்கே இருந்து இந்தச் சொத்தெல்லாம் மீட்கப்பட்டது என அறநிலையத்துறை புத்தகமாகவே அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதைச் சொல்வதெல்லாம்தான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரியே தவிர, ஆன்மிகத்திற்கு அல்ல. சமூக வலைதளங்களில் நாம் பதிவிடும் கருத்துக்கள் சில நொடியில் மக்களிடம் சேர்ந்து விடுகிறது. நமது கருத்துகள் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வேண்டும். எதிரிகள் நம்மை இழிவு செய்தாலும் கண்ணியமாக பதில் தரவேண்டும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.