திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? - முழு விபரம்!
Tiruvannamalai: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மலை ஏறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.26) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
கார்த்திகை தீப தரிசனம் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மலை ஏறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புரையின்படி, தீபத்திருநாளான 26.11.2023 அன்று 2,500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
- திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான 26.11.2023 அன்று காலை 05.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.
- குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்கள் முதல் அதிக பட்சம் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
- மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அரசு அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகல் மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவ அலுவலரிடம் உடல் தகுதி சான்று சமர்ப்பித்து அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
- பக்தர்கள் பேகோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.
- 26.11.2023 அன்று பிற்பகல் 02.00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும்போது திரும்ப கொண்டு வர வேண்டும்.
- மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை.
- மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யினை அனுமதிக்கப்பட்ட கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும். வேறு எந்த இடத்திலும் நெய்யினை ஊற்றவோ, நெய் தீபம் ஏற்றவோ கூடாது.
பக்தர்கள் மேற்கண்ட நிபந்தனைகளை தவறாது கடைபிடித்து அருள்மிகு அண்ணாமலையார் மலை மீது ஏறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கேட்டு கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்