Tirumavalavan: பதற்றம் ஏற்படுத்த முயற்சி! ஆம்ஸ்ட்ராங், ஆருத்ரா கோல்டு, பாஜக குறித்து விசாரணை தேவை - திருமாவளவன் பேட்டி
Tirumavalavan Meets CM Stalin: திமுக அரசுக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங், ஆருத்ரா கோல்டு, பாஜக குறித்து விசாரணை தேவை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் விசிக தலைவர் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர், "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் முயற்சி செய்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் செயல் திட்டம் இருப்பதாக சந்தேகம் வருகிறது. இதனை நடைமுறைப்படுத்திய கூலிக்கும்பல் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரம்
ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சில நிமிடங்களில், பாஜகவை சேர்ந்த ஒருவர் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். காவல்துறை நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாகவே, பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைப்பதற்கு முன்னதாகவே, எடுத்த எடுப்பிலேயே தமிழக அரசு விசாரிக்கக் கூடாது, ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் இருக்கக்கூடிய சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாஜகவின் குரலாக இருந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா கோல்டு விவகாரமும் பேசப்படுகிறது. ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் பாஜகவில் பொறுப்புகளில் உள்ளனர். பாஜக இதில் வலிந்து தலையிட்டு சிபிஐ விசாரணை கோருகிறது. இவையெல்லாம் புலனாய்வு விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவை. அவர்களின் செயல் திட்டம் என்பது திமுக அரசுக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும், சட்ட ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும் என்பதாக தான் இருக்கிறது.
பதற்றத்தை உருவாக்கும் நோக்கம்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மீது தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அரசியல் அநாகரிகத்தின் உச்சமாக உள்ளது. கருத்தியல், அரசியல் விமர்சனங்களை வைக்கலாம். ஆனால், அவரை கொச்சைப்படுத்துவதன் மூலம் மேலும் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்று அவர்களின் நோக்கங்களை உணர முடிகிறது.
நீட் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம்
நீட் தேர்வு குறித்தும், திருமண சட்டங்கள் சீராய்வு தொடர்பாகவும் மனு அளித்திருக்கிறோம். நீட் விவகாரத்தில் தற்போது நாடு முழுவதும் விவாதம் நடந்துள்ளது. நாடாளுமன்றத்திலும் நீட் விவகாரத்து எதிராக குரல் எதிரொலித்துள்ளது.
நீட் தேர்வில் ஊழல் முறைகேடு நடந்துள்ளன. அதை மூடி மறைக்க பா.ஜ.க முயல்கிறது. நீட் எதிர்ப்பு நடவடிக்கையாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வரிடம் வலியுறுத்தினேன்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சென்னை பெரம்பூரில் உள்ள அவருடைய வீட்டருகே அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸார் 5 நாட்கள் காவலில் எடுத்து, தனித்தனியே அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்