Mangadu Accident : கார் விபத்து - அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி!
மாங்காடு அருகே இரும்பு தடுப்பில் கார் மோதி விபத்தில் அதிமுக பிரமுகர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே இன்று காலை அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் சாலையோர இரும்பு தடுப்பில் மோதி அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் சிக்கியவர்களை மீட்டனர். அதில் மூன்று பேரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு என்பதும், இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது. அதிமுகவை சேர்ந்த இவர்கள் தொழிலதிபர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
சம்பவ இடத்தில் கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு, சுதாகர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். வெங்கடேசன், ராஜவேலு ஆகிய இருவரும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டாபிக்ஸ்