கடலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 3 பேர் பலி; 3 பேர் படுகாயம்
கடலூர் அருகே பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகினர்.
கடலூர்: கடலூர் அருகே உள்ள எம்.புத்தூரில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் அருகே உள்ளது எம்.புதூரில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமாக பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வந்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூலிக்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இன்று (ஜூன்.23) மதியம் வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசு தயாரிருக்கும் ஒரு அறை திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தரை மட்டமானது. அதில் பணியாற்றிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயம் அடைந்தனர். அப்போது வெடி வாங்க வந்திருந்த வெள்ளக்கரை பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவரும் வெடிவிபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த கடலூர் திருப்பாதிரிபுலீயூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெடி விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
டாபிக்ஸ்